Monday, April 19, 2010

கூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்.

உலகில் உள்ள ஒவ்வொன்றும் இடைவிடாது மாறிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடே, எதிர்மறைகளின் போராட்டமே வளர்ச்சியின் உந்து சக்தி

-ஹெகல்



அன்று நடந்த கூட்டத்தில் ம க இ க இயக்கத் தோழர்களும், புரட்சி இயக்க சகோதரிகளும் ஒழுக்கம் பற்றியும், கலாசார சீர்கேடு பற்றியும் பேச எத்தனித்து தனி நபரின் சுதந்திர சிந்தனையும், வாழ்க்கையையும் அநாகரீகமாக பேசி சமுதாயத்திற்கான நல்லது எது என்று கையில் எடுத்துக்கொண்டு பேசினார்கள் புரிதலற்ற காரணத்தால்.



நண்பர்களே ஒழுக்கம், கலாச்சாரம் என்பது மனிதன் தோற்றுவித்த ஒரு கோட்பாடுதானே. கூட்டு நலன் கருதி என்ற போர்வையில் ஒரு கும்பல் அதிகாரச் சிந்தனையுடன் தோற்றுவித்ததே கலாசாரக் கூறுகளும் அதை ஒட்டிய ஒழுக்கக் கூறுகளும். அவற்றை ஏற்றுக்கொள்ளும் உரிமை அனுமதிக்கப்படும் பொழுது ஏன் சந்தேகப்படவும், நிராகரிக்கவும் , விமர்சிக்கவும் மறுக்கப்படுகிறது? இப்படிப்பட்ட சார்புடைய சிந்தனைகளையும், தனிநபர் கொச்சை விமர்சனங்களையும் நானறிந்த மார்க்சியம் வழிமொழியாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ( எந்த மேடையிலும் ஒரு விமர்சகரை தேவடியா என்று CPI, CIIM அழைத்ததில்லை.) மனிதம் சார்ந்த பண்புகளையே நான் ஒழுக்கமாக கருதுகிறேன். அதைவிட்டு பார்ப்பனியம் கற்றுகொடுக்கும் "உறுப்பு சார்ந்த ஒழுக்கம்" என்பது பெண்களுக்கெதிரானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்துக்கெதிரானது.



அன்று குரல் கொடுத்த அத்தனை நண்பர்களும் எங்கல்சின் "குடும்பம், அரசு, தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம்" எனும் புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். கடவுளின் பெயராலும், கலாசாரத்தின் பெயராலும் பார்ப்பனிய பக்தி இயக்கம் செய்த சதிகளை பெரியார் ஐயா அவர்கள் பக்கங்களாக எழுதிதள்ளியும், பெண்கள் இன்னும் கலாசார அடிமைகளாய் இருக்க கடவர்கள் என்று ஆண்களுக்குத் துணையாகவும், சில சுயநல அரசியல் விளம்பரதாரர்களுக்கு துணையாகவும் குரல் கொடுப்பதும், ஒரு பெண்ணை பலபேர் முன்னிலையிலும், ஊடகங்களிலும் கொச்சையாக எழுதுவதும் போதிய வாசிப்பனுபவம் இல்லாததையே காட்டுகிறது. கற்றறிய நினைக்கும் பெண்களை முடக்கி வைப்பதும் அத்தகைய கலாசார கட்டமைப்புகளே என்பதை மனதில் கொள்ளவேண்டும். கலாச்சாரம், ஒழுக்கம், ஆடை நாகரிகம் பற்றி பேசுவோர் ஏன் ஆதிகால வாழ்க்கை முறையை பரிந்துரைக்காமல், இடையில் தோன்றிய அரசியல், மதம் சார்ந்த கலாசாரத்தையே பற்றிகொண்டலைகிறார்கள். (பாவம் அறியாதவர்கள்...!!!)...ஆதியில் கூட்டு குழு வாழ்க்கை-பாலுறவு (பாலிகமி) போன்ற பழக்கம் வைத்திருந்தார்களே? இன்றும் சில பழங்குடி சமூகத்தில் இம்முறை நடைமுறையில் உள்ளதே...அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. அல்லது அப்பெண்களுக்கு உறுப்பு இல்லையா?



'சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டாள். கருப்பையை அறுத்தெறிந்துவிடுவாள் போன்ற சிந்தனைகளைக் ஒரு ஆண் கூற சுதந்திரம் அளித்த இச்சமூகம், தன் உடலுக்கு நேரும் வன்கொடுமைகளை எழுதுவதை ஆபாசம் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. அந்த உறுப்புகள் உடம்பில் இருப்பதை இவர்கள் ஆபாசம் என்று கருதுகிறார்கள் போலும். சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வரை பெண்ணின் அங்கங்களை வருணித்துப் பாடும் ஆண்கவிஞர்களை புலவர்கள் என்று போற்றி பரிசில் தரும் மண்ணிது. பெண்களே நான் ஆண்களை குறை கூறவே மாட்டேன் ஏனென்றால் ஆண் சிந்தனையை கண்மூடித்தனமாக உங்கள் சிந்தனையாக நீங்கள் ஏற்றிவைத்திருக்கிறீர்கள். அதுவே அவர்களின் வெற்றி.





ஆண் நண்பர்கள் லீனாவின் கவிதைகளை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு கோபம் ஏற்படும் விதத்தில் தூண்டிவிட்டு பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அன்று அக்கழக தோழர்கள் எழுப்பிய சில கேள்விகள்

பெண்ணியம் பேசும் ஆதரவாளர்கள் ஏன் குஜராத் வன்முறைக்கும், தஸ்லீமா நஸ்ருதீனுக்காக போராடவில்லை என்று கேட்டார்கள். கலாச்சாரத்திற்கும் ஆபாசத்திற்கும் எதிராக தடை விதிக்க கோரும் இவர்கள் ஏன் சினிமா அரங்கில் நின்று போராடுவதில்லை. இரட்டை அர்த்த பாடல்களும், தொப்புள் நடனங்களும், பிதுங்கிய மார்பும் காட்டி வியாபாரம் செய்யும் முதலாளிகளுக்கெதிராக கலாசார சீர்கேட்டை பேசலாமே? மேலும் ஆண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள பாலியல் புத்தகங்களுக்கு தடை விதிக்க போராடலாமே என்று எதிர்கேள்விகள் கேட்பது ஒருவரை ஒருவர் மடக்கும் சாமர்த்தியத்தை மட்டுமே காட்டும் .. இவர்களுக்கு தேவை விளக்கமா அல்லது வாக்குமூலமா.

என் இலக்கிய அறிவுக்கெட்டியவரை லீனா எத்தலைவர்களையும், இயக்கச் சிந்தனைகளையும் நிந்தனை செய்ததாக படவில்லை...அவர் கூறுவது உலகறிந்த உண்மை...அதாவது...ஒரு பெண்ணை அடைய ஆண் எவ்வித உத்திகளையும் கைகொள்கிறான் (இது பெண்களுக்கும் பொருந்தும் சுயநலம் மனிதனுக்கு பொதுவானது தானே) அதிலும் அறம் பேசும் மார்க்சியத்தையும், தொழிலாளர்களுக்கு உயிர் மூச்சான கம்யூனிசத்தையும் , மற்றும் புகழ் பெற்ற புரட்சியாளர்களையும் பேசி தன் மேதமையை காட்டுகிறான். இங்கு இவற்றை எதிர்கொள்ளும் ஒரு பெண் இலக்கிய அறிவுள்ளவள், மார்க்சியத்தில் ஈடுபாடுள்ளவள் என்ற காரணத்தால் இவற்றை பேசி மயக்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறார். - இதற்கு நம் சகோதரர்கள் "நீ சந்தித்த (அதாவது அப்படி உறவு வைத்துக்கொண்ட என்று பொருள்) அப்பேற்பட்ட நபர்களின் பட்டியலை கொடு" என்று மிகவும் கொச்சையாக பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஒரு கவிஞர் உண்மையைத்தான் எழுதவேண்டும், அதுவும் தான் எதிர்கொண்டிருந்தால்தான் எழுதவேண்டும் என்பதெல்லாம் முதிர்ச்சியற்ற போக்கு. அப்படிஎன்றால் ஒரு ஆண் கற்பகாலம் பற்றியும், பிரசவ வேதனை பற்றியும் எழுதவேக் கூடாது (என் தோழன் வசுமித்ர கூறுவது).

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை வசைச்சொல்லாக பயன்படுத்தும் ஆண்களுக்கு அதை மந்திரச்சொல்லாக உபயோகிக்க வலியுறுத்தும் ஒரு போக்காகவே நான் அதைக் கருதுகிறேன். அல்லது பெண்களின் அங்கங்களின் மேல் ஆண்கள் ஏற்றிவைத்திருக்கும் பாலியல் சார்ந்த அத்தனை சிந்தனைகளுக்கும் எதிராக அச்சொல்லை, அந்த உறுப்பை பொருளற்றதாக மாற்றிவிடும் போராட்டம். அப்படி பொருளற்றதாய் மாற்றி விட்டால் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிவிடலாம் என்ற மூடநம்பிக்கையின் காரணமாகக்கூட கருதலாம்....

நண்பர்களே எல்லோருக்கும் அந்தரங்கம் என்றொன்று இருக்கிறது...பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாலேயே அந்த அந்தரங்கங்கள் எல்லோருக்கும் சொந்தமென்றாகிவிடாது. இதில் கவனிக்கவேண்டியது அந்தரங்கம் என்பது ஒருவருடைய பாலியல் உறவு சார்ந்தே (காமம் சார்ந்தே) இருக்கிறது. ஆகவேதான் அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வமும் மேலோங்குகிறது. அதுவும் கலாசாரத்தைப் போற்ற, என்பதைவிட, ஒருவர் காமத்தை எவ்வாறெல்லாம் கைகொள்கிறார். அதிலிருந்து நமக்கும் ஏதாவது உக்தி கிடைக்குமா என்ற சிந்தனை, அல்லது, நம்மை போன்று நால்வர் காம இச்சைகள் கொண்டுள்ளனர் என்று அச்செயலை அறிவதன் மூலம் நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க உதவுகிறது. உறுப்பு சார்ந்த ஒழுக்க மீறலால் ஏற்படும் சீர்கேட்டைவிட அறமற்ற, மனிதாபிமானமற்ற, பணத்தாசையினால் விளையும் சீர்கேடுகள் தான் களையப்படவேண்டியவை...ஆனால் அவைகளுக்கெதிராக நாம் ஏதும் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அங்கே நாம் எதிர்க்கவேண்டியது முதலாளிகள், அரசியல்வாதிகள். கலாசாரம் என்ற பெயரில் நாம் எதிர்ப்பது ஒரு தனிமனிதனை. அப்பாவிக் குடிமகனை(அல்லது மகளை) அதுவும் உயிர்பயம்காட்டி.



ஒருவரை எதிர்கொள்ள/ விமர்சிக்க/ வீழ்த்த ஒருபோதும் ஒழுக்கமான/ அறம் சார்ந்த முறைகளை யாரும் கையாள்வதில்லை. ஒன்று அவமானம் எனும் ஆயுதம் ஏந்துகிறார்கள் (மானம் என்பது ஒரு கற்பிதமே என்று விவாதிக்கலாம்) அல்லது பௌதிகமான ஆயுதம் ஏந்தி உயிர் பயம் காட்டுகிறார்கள். இது அடக்குமுறை. உயிருக்கு பயந்து ஒடுவோர் ஒடுங்குவது, அல்லது ஒடுக்கப்படுவது ஜனநாயகமன்று. அப்படி ஒருவரை முடக்குவதால் கிடைக்கும் வெற்றி அவர்கள் ஏந்தும் சொற்களுக்கும், ஆயுதங்களுக்கும் கிடைப்பதே அன்றி அறிவு சார்ந்த வெற்றியல்ல. போர்க்களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எதிராளியை எதிர்ப்பது கோழைத்தனமென்றால், இது போன்று உயிர் பயம் காட்டி வன்முறையை ஏவுவதும் கோழைத்தனமான செயலே..



எல்லாவற்றிலும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பூசி பார்பவர்கள் அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்துகொள்கிற ஊடகமாக இலக்கியத்தை பார்க்கத்தவறி வருகிறார்களோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இங்கே எழுத்தோ, கருத்தோ பிரச்சனை இல்லை. எழுதியவர்தான் பிரச்சனை. அதிலும் அவருடைய இனம் (பாலியல் பிரிவினை) கூடுதல் பிரச்சனை. இங்கே சுதந்திரம் என்பதற்கு கூட பாலியல் சாயம் பூசி அது ஆணின் சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று செயல்படுகிறார்கள். இவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவோ. அல்லது கலாச்சாரம் என்ற பெயரிலே ஆண்கள் பெண்கள் மேல் ஏற்றி வைத்திருக்கும் அடிமைப்பாட்டை அறியாத பெண்களும் சேர்ந்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண்கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைவுகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருத்தி அறிவிக்கும்போது பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எறிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பதுதான்.



வலைப்பதிவில் எழுத வந்த இந்த குறுகிய காலத்திலேயே என் வலைப்பதிவில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. என் எழுத்துக்கள் வசை மிகுந்ததாகவும், பாலியல் சார்ந்தே இருப்பதாகவும், இப்படி நான் ஆண்களுக்கெதிராய் எழுதுவது, என் கணவருக்குத் தெரியுமா, பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று ஆண் கூட்டம் கூச்சலிட்டது. ஒருவேளை பெண்கள் ஏமாற்றுபவராய் இருந்தாலும் சதவிகிதம் சொற்பமாகவே இருக்கும். மேலும் அவள் உறுப்புகளை சிதைக்கும் செயல்களையும். குழு கற்பழிப்புகளையும் செய்வதில்லை. இப்படி பொறுக்க முடியாத, ஆனால், ஆண்டாண்டு காலமாய் பெண்களை வெறும் மாமிசமாய் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் அச்செயல்களைப் பற்றியும் எழுதும் பொழுது கலைநயமிக்க உவமைகளையா தேர்ந்தெடுத்து எழுத முடியும். எங்கள் மார்பை போகிற போக்கில் எவரோ பிசைந்து விட்டு போவார், நாங்கள் அதை மார்பு என்றும், முலைகள் என்றும் உண்மை பெயர் சொல்லி எழுதக் கூடாதென்பது நகைச்சுவையாக உள்ளது.

சுருங்கச் சொல்லின் மார்க்ஸ் கூறியது போல் நாம இவர்களுக்காகவும் சேர்ந்து தான் போராடுகிறோம் (நாங்கள் எழுதுகிறோம்). நாளை எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர்களின் தனி மனித சுதந்திரம் தடை செய்யப்படும் போதும் நாங்கள் இதுபோல் குரல் கொடுப்போம். நாங்கள் நம்பும் மார்க்சியம் எங்களுக்கு வழிகாட்டும்.







Friday, March 12, 2010

என் மித்ர......

வாழ்நாள்தோழனாய் வசுமித்ரவை

நானும்,

என்னை

வாழ்நாள்தோழியாய் அவனும்

இணைத்துக்கொண்டோம்.

எல்லையற்ற பெருவாழ்வு...

Sunday, February 21, 2010

Few Thoughts

உங்கள் மனம் குளிர, உங்களை மகிழ்விக்க, உங்களை பொருட்படுத்த...நான் என் முகத்தை மாற்ற இயலாது...நல்லவள் எனும் பெயர், கற்பிதங்களின் படி நடக்கும் என் பொய்மைக்கு கிடைக்கலாம். நிஜத்தில் நான் கர்வி எனும் பெயர் எடுக்க விரும்புகிறேன்.

பெரும்பான்மையைப் போன்ற பிரதியாய் ஒருவர் இல்லையேல்..அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக விதிக்கிறது சமூக கட்டமைப்பு....... "


எழுதப்பட்டவை வரலாராகிறது...மற்றையது நிஜங்களாகிறது....

அப்பாவின் கனவு..மகளின் லட்சியம்...
கணவனின் கனவு...மனைவிக்கு அந்தஸ்த்து...
பெண்ணின் கனவு...இடுகாட்டின் விளைச்சல்....

மற்றவர்கள் கற்பித்ததால் போதும் என்று நினனத்து அடங்கியபின்னரும்..உள்ளே ஏதோ ஒரு அரூபமான அழுத்தம் தோன்றுகிறதே, எனக்கு அந்த உணர்வு போதாமை....போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கூற்றை உலகின் மிக ஆபாசமான வார்த்தை என்பேன் நான்...

நீங்கள் கிசுகிசுக்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் அன்பைப் பரிமார்க்கொண்டிருக்கிறோம்... எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம் உங்களுக்கு படுக்கை அறை தெரிகிறது... எங்கள் உடல்களை பங்கு போடுவதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை... உங்கள் கற்பனைப் புனர்ச்சிகளுக்கு நாங்கள் வெளியேற்றம் செய்ய இயலாது...


என்னைப் பற்றி முழுக் கதையும் தெரிந்த பின், என்னைக் கட்டாயமாக நீங்கள் வெறுப்பீர்கள். அப்படி வெறுக்கவில்லை என்றால் நீங்கள் முட்டாள். அதையும் மீறி நீங்கள் புத்திசாலி என்றால்..நீங்கள் இந்த சமுதாயத்திடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..

Sunday, February 14, 2010

ஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடையும்.



’ எங்களுக்கு எஜமானர்களாய் இருப்பது உங்கள் நலனுக்கு ஏற்றதாய் இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு அடிமைகளாய் இருப்பது எங்களுக்கு எப்படி நல்லதாய் இருக்கமுடியும்?

தூசிடைடிஸ்


ஆணின் கரங்களால் பெண்களின் குரல்வளையை இறுகப் பிடித்திருப்பதே வரலாறு.

அரசியல், இலக்கியம் முதற்கொண்டு இன்னபிற துறைகள் அனைத்திலும் ஆண் பெண்ணை நோக்கிக் கசியவிடும் ஆண்களின் பெருந்தன்மையில் வீசும் பச்சை மாமிச வாடை குடலைப் புரட்டுகிறது.

தனக்குகந்த கைப்பாவைகளாய், ரசனை வக்கிரத்துக்கு இரையாய் இருக்க பெண்களின் அழகை வர்ணித்து பாடும் ஆண்களின் பேரன்பு வெள்ளம் சாக்கடை நீராய் தேங்கி நிற்கிறது. சுயம் இழந்து, கவிழ்ந்து போக ஆபரணங்களை சூட்டி, அலங்காரம் செய்து வலம் வரும் தேவ கன்னிகளாய் ஆண்கள் தங்கள் கனாக்களில் பல ஊடகங்கள் கொண்டு உலவ விட்டு குளிர் காயும் அவர்களின் கயமை திக்கெட்டிலும் பரவி நிற்கிறது.என் அருமைத் தோழிகளே .... நான் மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம் அழகியல் நாற்றத்தில் நம்மை தோய்த்தெடுக்கும் ஆணின் கருத்தமைவுகள் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள் என்பதுதான். உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள், நடை, உடை பாவனைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குங்கள். ரம்பை, ஊர்வசி, சீதை [இதில் கண்ணகி கூட விதிவிலக்கல்ல அவளுக்கு ஆண் அமைத்துக் கொடுத்தது கற்பின் அழகியல்] முதல் இன்றைய நடிகைகள் வரை எல்லாப் பெண்களும், பெண் கதாப்பாத்திரங்களும் ஆண்களால் அல்லது ஆண் கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன பெண்களால்

தோற்றுவிக்கப்பட்டவை.பெண்ணை, பெண்ணின் அழகியலை வர்ணிக்கும் ஆண் சொற்களும்,ஆண் பாடல்களும் ,ஆண் தனக்கான பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பும் ,நினைக்கும் கட்டளையிடும் செயலின் பிரதிபலிப்பு. தனக்கான பெண், தன் ஆளுகைக்கு உட்பட்ட பெண் இந்த அதிகாரத்தை ஒற்றையாய் வைத்து அது வரலாறு தொடங்கி , இன்னபிற அனைத்தும் ஆண்தன்மை கொண்டனவாகவே இருக்கிறது. இதே கூற்றையே இலக்கியத்திலும் ஏற்றி, புனித சேறு பூசி, பெண்கள் முகத்தில் காலம் காலமாக சந்தனமென ஏமாற்றி தடவி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கிட்டாமல் செய்து அவளை அடிமையாய் வைத்திருக்க கடவுள்,கற்பு, பண்பாடு, ஒழுக்கம், பத்தினித் தன்மை [வேலைக்குப் போகும் பெண்கள் கற்பிழந்தவர்கள் என சுப்பிரமணி [ சங்கராச்சாரியர் ] அறிவிப்பு செய்ததும் அதை கேட்டுக்கொண்டு பெண்கள் நின்றதையும் நினைவில் கொள்க.] எனும் கற்பனை மூலம் பல புனைவுகளை மேற்கொண்ட ஆண் இனம், பெண்களும் கல்வி கற்க ஆரம்பித்தவுடன் அவளை வீழ்த்த அழகியல் போதையை சந்தையில் பரப்பியது.ஆண்களின் உள்ளாடை முதல், கட்டிட கம்பிகள் போன்ற பொருள் வரை [கழிப்பறை பீங்கான் உட்பட...ஆண்களுக்கு அது வராது போல] எதையும் விற்க பெண்களை 'மாடல்களாய்' உபயோகித்து மக்களை விலை பேசும் 'திறந்த விபச்சாரத்தை' செய்து வருகிறது முதலாளிகள் உலகம். ஊடகங்களின் 'மாதிரிப்' பெண்கள் அனைவரும் அழகையும், உடலையும்

முன்னிருத்துபவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆணுக்கான வாசனை திரவம் கூட ஒரு பெண்ணை கவர்வதற்கான சாதனமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவ்வாசனையில் தன் வசம் இழுக்கும் பெண்கள் அவன் புட்டத்தை கடிக்ககூட தயாராய் இருப்பதாக [ஆக்ஸ் சென்ட் ]ஆணின் பெண் என்ற கற்பனையை முன் வைத்து பெண் இயக்கப்படுகிறாள். பெண்ணுக்கு பிடித்தது, உகந்தது என இவர்கள் முன்வைப்பது அலங்காரப்பொருட்கள் மட்டுமே, நகைகள், புடவைகள் ஆடம்பரங்கள் மட்டுமே.ஆண் செய்யும் ஒவ்வொரு காரியமும், வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெண்ணை கவரவே எனவும் அவளை வீழ்த்துவதே வாழ்நாள் சாதனையாக ஆண் கருதவேண்டும் என்றும் ஆண் இனத்தையும் சேர்த்து இழிவு படுத்துகிறது விளம்பரங்கள். மற்றும், பல்வேறு ஊடகங்கள். பெண்ணுக்கோ தோலின் நிறத்தை மாற்றி அமைப்பதும், அலங்காரம் கொண்டு போட்டி போடுவதுமே வாழ்வியல் ஆதாரமாய் கற்பிக்கிறது மனசாட்சியற்ற முதலாளி வர்க்கம்.இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம் பெண்கள் தங்கள் உடலின் மேன்மை அறியாமல் அதை ஒரு பண்டமாய் நினைத்து சந்தையில் விற்பது. எல்லாவற்றிற்கும் 'தேவை' (demand) ஏற்படுத்தி சந்தையில் தள்ளிவிடும் முதலாளிகள், பெண் உடலுக்கான 'தேவையையும்' ஏற்படுத்தி தங்கள் வீட்டுப் பெண்களை போர்த்தி பூசை செய்து [இதுவும் ஒரு பெண் விரும்பத்தகாததே. இதை இன்னும் கொஞசம் ஆழமாக நோக்கினால் முதலாளி வீட்டுப் பெண்களும் திறந்த முதுகுடன் வலம் வருவதையும் தங்கள் உடலை பார்வைக்கு வைப்பதையும் காணலாம். இது ஒப்பு நோக்கில் விரிவாக ஆராய வேண்டிய விசயமே ]மற்ற பெண்களை உயிரற்ற பொம்மைகளாய் பயன்படுத்தி அவளுக்கு வேசி பட்டம் வாங்கித்தரும் சேவையை செய்து வருகிறார்கள்.

இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் முதலாளியம் எவ்வாறு தன் உடலை அழுக வைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும். மார்க்ஸ் கூறியதைப்போல முதாளித்துவம் அனைத்து உறவுகளையும் பணப்பட்டுவாடாகவே பார்க்கிறது. அது குடும்பத்தின் உணர்ச்சிகரமான முகத்திரையை கிழித்துவிட்டது. .

ஆண்டாண்டு காலமாய் ஆணினத்தின் பாலியல் வேட்கைகளை பெண்ணியல்புகலாய் சொல்லிவந்து, இன்று பெண்கள் தங்கள் அழகை, அங்கங்களை முன்வைத்தால்தான் தங்கள் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள முடியும் என நினைக்குமாறு நிச்சயித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது ஆணினம்.

உடலை புனிதப்படுத்தி,ஒழுக்க நெறிகளுக்கு தசைகளை இரையாக்கி,பனத்திற்கு திறந்துபோட வைத்து ஆண்களை விலை பேச வைக்கும் நோக்கோடு பெண்ணுடல் முன்வைக்கப்படுகிறது. இதை அறியா பெண்கள் உடலை பிரதானப்படுத்துவதை முற்போக்கான செயலாகவும் சுதந்திரமான ஒன்றாகவும் கருதுகிறார்கள், பத்தினித்தனம் எப்படி ஆணுக்கு பெருமை சேர்க்கிறதோ அதேயளவில் திறந்து போடுதலும் அவன் விருப்பத்திற்குரியதே.

என் நிர்வாணம் எனக்கு மதிப்பிற்குரியதாய் உள்ளது. விரும்பும்போது, விரும்பும் இடத்தில் நான் மட்டுமே கட்டளை இடக்கூடிய விதிகளுக்குட்பட்டு என் உடலை வெளிப்படுத்துவேன். என் சௌகரியத்திற்காக உடைகளைக் கூட்டவும் குறைக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு. என் உடலை ஆளும் சர்வாதிகாரியாக நான் மட்டுமே இருப்பேன் என பெண்கள் அறிவிக்கவேண்டும். உடலை மாமிசத்துண்டாக மட்டுமே பாவிக்கும் ஆணின் பாலியல் வேட்க்கைக்காக அவிழ்த்துப்போட நம் உடலை முன் வைப்பதில்லை என்ற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டும். உடலை பொக்கிஷமாக கருதவேண்டும்.

பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணியும் சுதந்திரத்தை அவர்களே எடுக்கவேண்டும். தன் தசைகளை விலைக்கு முன்னிருத்தாமல் சுதந்திரத்திற்காக முன்னிருத்தலாம். முடிந்தால் ஒரு உதாரணத்துக்காக தங்கள் அழகை அப்படியே விட்டுவிடலாம், புருவங்களை மழிக்காமல், பூச்சுக்கள் இல்லாமல். எவ்வித அலங்காரமும் இல்லாது வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள், உங்கள் பின் வரும் ஆண்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அவன் எதிர்பார்ப்புக்கும் வர்ணனைக்கும் உகந்த பொருளாக நீங்கள் இல்லையென்றால் வர்ணனைப் பாடல்களாவது குறையும்.

ஆடை அலங்காரத்தின் உபயோகம் இரண்டுவகைகளில் ஒரு பெண்ணுக்கு உதவுகிறது. முதலாவது பாலின வேட்கைக்கு உகந்த பொருளாக தோற்றம் தருவது, இரண்டு கணவனின் சமூக படிநிலையைப் பிறருக்கு புரியவைப்பது. இவ்விரு தோற்றமும் வழக்கம் போல பெண்ணைப் பிறர் சார்ந்த உயிராகவே நிறுத்த உதவுகின்றன. பெண் ஆடை அணிவதன் நோக்கம் பிறருக்கு தன்னைக் காட்டிக்கொள்வதின் மூலம் தன் இருப்பு நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள என விளக்குகிறார் சிமோன்.

பெண்ணுக்கு வாழ்நாள் தேவை ஆணின் அருகாமையே, ஆணின்றி பெண்ணால் தன்னிச்சையாக இயங்கமுடியாது என்பதன் ஒரு தொடர்ச்சியாகவே நான் திருமண உறவையும் காண்கிறேன். அதை பெண் நம்பி, பின்பற்றி ஒழுகவே கலாச்சாரம் பண்பாடு என ஆண்கள் வகுத்த வாய்க்கால் ஓடுகிறது. திருமணம் ஒன்றே பெண்ணுக்கு பாதுகாப்பைத் தர வல்லது என நிறுவப்பட்டு அவள் குடும்ப உறவில் ஈடுபடவும், ஆணுக்காக வாரிசைச் சுமக்கவும், அவன் தரும் வசதி வாய்ப்புக்காக நிரந்தர விபச்சாரியாக வயது கழிந்ததும் தாய்மைப் படிமத்தைத் தூக்குச் சுமக்கவும் ஆளாகிறாள். ஆனால் பாலியல் வன்முறைகள் அனைத்தையும் ஆணே செய்கிறான். ஆணுக்கு பெண்ணின் துணை ஒவ்வொருகாலத்தும் தேவைப் படுகிறது, தேவை என்று சொல்வதைவிட இட்ட வேலையைச் செய்ய ஒரு ஏவலாள் என சொல்வது சரியானது. அவளை அனுபவித்துக்கொண்டே இருக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, பெண்களுக்கு சுதந்திரமற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி தன் விருப்பங்களைக் கொண்டாடி வருகிறது ஆணினம்.

ஆண்களின் மாபெரும் வெற்றி அவன் ஆதிக்க கருத்துகளை பெண்களே முன் வந்து தானே விரும்பி ஏற்றுக்கொள்ளவைத்ததுதான். என் கடன் பணி செய்து கிடப்பதே என பெண்களைச் சொல்லவைத்ததும், அவள் மகிழ்ச்சி அதுதான் என அவளையே பின் பற்ற வைத்ததும்தான்.

[ கலாச்சார புரச்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது.

ஒருதடவை தலைவர் மாஓ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வைக்கமுடியும் என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்று விடும் என்றார் சூ. பூனையின் வாயைக் குறட்டினால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் தே. பூனை மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன என்று அவர்கள் மாஓவிடம் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உராஞ்சி விடவேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின் புறத்தை நக்குநக்கென்று நக்கும், உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம் விரும்பித் தின்னத்தொடங்கிவிடும் என்றார் மாஒ!.]

பெண்ணின் தாழ்வு நிலையை இன்னொரு பெண் சுட்டிக்காட்டினால் அப்பெண்னை முதலில் தாக்குவது ஆணல்ல இன்னொரு பெண்தான். தனது தேடல்களை பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறியும் பெண் ஆணின் சதிகளைக் கட்டவிழ்க்கும் போது அவள் கோருவதாக ஆண்கள் சொல்வது, பாலியல் சுதந்திரம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விழியும் விருப்பம். ஆணின் கலாச்சார பயம் இதை மட்டுமே கூறும். அவன் மனைவியும் , மகளும் ஒரு பெண்கள்தான் அவர்களும் அதைப் பேசும் வாய்ப்பு இருக்கிறதல்லவா. இருக்கட்டும்.

பெண்கள் ஆம் என்று சொல்வதற்குள்ள சுதந்திரம், இல்லை என்று சொல்வதிற்கில்லை.

Tuesday, January 19, 2010

சமுக அறமும் , தற்கொலைகளும்.


சில நாட்களாக பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணத்தை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. கள்ளக்காதல் செய்தியும், விபச்சார அழகி கைது என்றும், கற்பழிப்பு விபரங்களும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அவர்கள் உபயோகிக்கும் 'உல்லாசம்', 'பகீர்' போன்ற வார்த்தைகளும், கைது செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படும் வாக்குமூல நடையும் மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. இச்செய்திகளை படிப்பவர்கள் மனதில் வலியை ஏற்படுத்துவதற்கு பதில, அச்செயல்களை அவர்கள் எப்படி புரிந்திருப்பார்கள் (.ம் கற்பழிப்பென்று வைத்துகொள்ளுங்கள்) என்று மனதில் காட்சி ஓடச்செய்து மேலும் காம வெறியைப் புகுத்துவதாகவே உள்ளது.

ஒவ்வொரு சொற்களும் விவாதத்துக்குரியதாய் உள்ளது. முதலில் 'கள்ளக்காதல்' - காதல் என்பது எவருடன் வந்தாலும் அது காதலாகத்தானே இருக்கவேண்டும், அது கள்ளகாதலாய் குறியிடப்படுவதற்கு எது காரணம்? 'ஒழுக்க' விதிகள் எவ்வாறு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று விவாதிக்க விரும்புகிறேன். சுதந்திரநாடு என்று நாம் பறைசாற்றிக்கொள்ளும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் பெயரால் நசுக்கப்படுவதை நான் உணர்கிறேன். திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம், (திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது - குடும்பம் எனும் அமைப்பு வன்முறைக் களமாக மாறும் சித்திரம் ). சில பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் உரிமை மானம், அவமானம் எனும் அர்த்தமற்ற கூற்றுகளால் முடக்கப்படுகிறது.

ஆகவே விருப்பமின்றி சகித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு. இங்கு எப்பொழுதும் ஒரு மனிதனை வீழ்த்த அவமானம் எனும் ஆயுதமே கையில் எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலும் அந்தரங்கம் என்பது காமம் சார்ந்தே இருக்கிறது, காமம் என்பதை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி, புனிதப்படுத்தி பின்பு அதையே ஒரு இழி செயலாகவும் விவரிக்கிறது சமூகம். எத்தனை ஒழுக்க முறைகள் விதிக்கப்பட்டாலும், பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எதுவும் உபயோகப்படவில்லை.

வசதி திருமணம் பற்றிய எங்கல்சின் கருத்து "வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகி விடுகிறது. இது சில சமயங்களில் கணவன், மனைவி, இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே".

திருமணத்தை அதன் வாழ்வுமுறையை சகித்துக்கொள்ளும் நிலையில் , பெண்ணோ, ஆணோ அவரவர் மனதில் இருக்கும் கனவு நபரை காணும் பொழுது மனம் அவரை நாடுவது இயல்பான ஒன்று. நேசிப்பவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு அவர்களின் விருப்பத்துக்கேற்ப அமையும் போது ஆணாய் இருந்தால் அலைபவன், பெண்ணாய் இருந்தால் விபச்சாரி. அவர்களின் உறவுக்கு கள்ளக்காதல் என பெயரிட்டு அவர்களை கேலி செய்கிறது. கேலிக்கும், அவச் சொற்களுக்கும் பயந்து அவர்கள் தங்கள் நேசத்தை மறைக்கவேண்டிய நிலை உருவாகிறது. சமுகம் ஒழுக்கம் என திணிக்கும் வன்முறையால் அவர்கள் தற்கொலை செய்யத் தூண்டி, அதில் வெற்றி பெற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது. பிடிக்காத துணையை நீங்கிவிட்டு வரவும் உரிமை இல்லை, தனக்கான துணையை நேசிக்கவும் உரிமை இல்லை. விளைவு சாவு.

சில நேரங்களில் காதலர்கள் பிரிக்கப்பட்டு , வெவ்வேறு நபர்களை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆழ்ந்த காதலாக (இதை சமுகம் கொடுக்கும் அழுத்தத்தோடு நான் கூறவில்லை. உண்மை காதல் என்ற கூற்றை நான் விரும்பவில்லை...ஏனென்றால் உண்மை என்பதும் கற்பிதமே,அதற்கப்பால் எவரின் உண்மை ...என நீண்டு கொண்டே போகும் .) இருந்த பட்சத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க இயலாமல் தங்கள் காதலை தொடர நினைக்கிறார்கள். குடும்பம், குழந்தை போன்ற உறவுகளை மதித்து அவர்கள் கடமையாற்றுகிறார்கள். அதே நேரம் அவர்கள் நேசத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்கிறார்கள்.

எந்தவொரு சட்டத்திலும் காதலோ,காமமோ குற்றமாக அறிவிக்கப்படவில்லை, இதை வகையில் பிரித்துப்பார்த்து விமர்சிப்பது முறையற்றது. குறிப்பாக 'உல்லாசம்' எனும் வார்த்தையை இவர்கள் உபயோகிக்கும் முறை குமட்டுகிறது. காதல் கொண்ட இருவர் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்வதும் , உடல் உறவு வைத்துக்கொள்வதையும் 'கணவனுக்கு அல்லது மனைவிக்குத் தெரியாமல் உல்லாசமாக இருந்துவந்தர்கள்' என்று விவரிக்கிறார்கள்.

அறிவித்துவிட்டு செய்யவும் அக்காதலர்கள் தயார் என்றால் அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? அல்லது தன்னுடன் வாழ விருப்பம் இல்லாத துணையை பெருந்தண்மையுடன் அவர்களுக்குப் பிடித்தவருடன் அனுப்பிவைப்பர்களா?

அடம் பிடிக்கும் கணவனுக்கும், மனிவிக்கும் என்ன தேவை அவர்கள் துணையிடம் இருந்து, மனமொத்த அன்பா அல்லது சமூக குழுக்கள் கற்பித்த மான, அவமான கூற்றுக்கு அடிபணியும் ஓர் அடிமையா? ஓர் ஆணும், பெண்ணும் விருப்பமுள்ள வரை மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும், இல்லாத பட்சத்தில் விருப்பமானவர்களுடன் சேர்த்துவைக்கவேண்டும் எனும் பெரியாரின் கூற்றை நான் முன்மொழிகிறேன். (ஒருவேளை கணவனோ மனைவியோ புரிதலின் பேரில் அதற்குத் தயார் என்றால், அவன் கூட்டிக்கொடுக்கிறான் என்றும் வசைமாறி பொழியும் இந்த சமுதாயம்).

குடும்பம் என்ற நிறுவனம் (institution) தோன்ற காரணமும், அரசியலும் அறிவதே இதற்கான தீர்வாய் அமையும். படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் அல்லது பார்த்தது போல் விவரிக்கும் போக்கை பத்திரிக்கைகள் கைவிடவேண்டும். இது ஒரு தனிமனித சுதந்திரம் சார்ந்த விஷயம், அங்கே ஒருவேளை கொலைகள் நிகழ்ந்து விட்டாலும் கூட கொலைக்கான விசாரணைகளை சட்டம் மேற்கொள்ளட்டும் அதை நீலப்படம் ஓட்டுவது போல் வியாபார நோக்கோடு பிரசுரிப்பது தவிர்க்கப்படவேண்டும்.



"இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன"
பூரியே.



சிறு குறிப்பு.

1. கற்பழிப்பு என்பது ஆணாதிக்கச்சொல். அதை வன்புணர்ச்சி என்றே அழைக்கவேண்டும்.
2. சிறிமி கற்பழிப்பு. இச்சொல்லில் இருக்கும் வன்முறையின் உச்சத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா...

முடிவாக...
கற்பு, ஒழுக்கம் ,தூய்மை, புனிதம், தாய்மை, பெண்மை, விபச்சாரி, இவை போன்ற சமுகம் சார் வார்த்தைகளுக்கு அஞ்சி பெண்கள், இவ்வுறவோடு தொடர்புடைய ஆண்கள், குழந்தைகள் தங்களுக்கு நேரும் வன்முறையை சொல்லப்பயந்து நாளும் இதே சமூகத்தின் முன் செத்து செத்துப் பிழைக்கிறார்களோ, அல்லது தற்கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இக்கட்டுரை....இனி இது தொடர்பாய் விரிவாகவும் எழுதுவேன்.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஓருவன் ;ஆண் வக்கிரமும், அதன் சுயமும், வெளிப்பாடும் ....


நேற்று ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு அருவெறுப்பான திரைப்படத்தை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. யதார்த்தம் என்ற பெயரில் கதாநாயகர்கள் பேசும் வசனங்கள் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைவதோடு ஆண்களை பெண்ணின் உடலுக்காக சதா ஏங்கி வெறிபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையாக அலைபவர்களாக சித்தரிக்கிறது.

ஆபாசத்தை திரைப்படமென விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் . இடம்பெறும் இழிவு காட்சிகள் அனைத்தையும் காணும் பெண்ணுடல் , மனம் கூசி குறுகும்போது ஆண்கள் அக்காட்சிகளை வெகு விருப்பத்துடன் துய்த்து ரசிக்கும் காட்சியில் இயக்குனர் ஆண் என்பதோடு ஆண்களின் உள்ளார்ந்த விருப்பம் பெண்களை பாலுறுப்பாகவே பார்க்கும் மனநிலைதான் என்பதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிக்கும் ஆண்களை நான் பரிதாபத்தோடு பார்க்கிறேன் அவர்களை நான் குறை கூற இயலாது, அவர்களுடைய ரசனை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனரின் பூர்ஷுவா மனம் கட்டமைத்திருக்கிறது .

கதாநாயகன் கார்த்தி கூலி, கூலி என்றால் தரகுறைவாகததான் நடப்பார்கள் என்ற இயக்குனரின் பார்வை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூலிகள் எப்பொழுதும் பாலுறவு சிந்தனை, கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் என எதுவும் அற்றவர்களாய் ஆள்பவர்கள், முதலாளிகள் சித்தரிப்பது புதிதல்ல. மாறாய் நாகரிகம் தெரிந்தவராய் , தன்னை உணர்வுகளின் மையத்தை சரியாக தொடுபவராக அவரது பேட்டிகளின் முலம் வெளிப்படுத்தியவர், இதற்கும் மேலாக படத்தின் இசை நாடா வெளியீட்டு விழாவில் தான் இத் திரைப்படத்திற்காக இழந்தது அதன் வலி தனக்கு மட்டுமே தெரியும் என மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு அறிவித்தார். உங்கள் வலியை பொது இடத்தில் நீங்கள் சொன்ன காரணம் மனிதர்கள் துக்கத்தை புரிந்துகொள்பவர்கள் என்ற நம்பிக்கைதானே. பின் எப்படி ஒரு திரைப்படத்தின் மூலம் இவ்வளவு பெரிய வன்முறையை செய்யமுடிந்தது. முடியும் , பணம் தேவையெனில் முதலாளிகள் அவர்களின் குடும்பப்பெண்களையும் ஒளிவுமறைவின்றி காட்டத்தயங்கமாடார்கள் என்பது மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அன்றாடவயிற்றுப்பாட்டிற்கு சாலையோரம் நிற்பவள் விபச்சாரி அதையே வெளிச்சங்களுக்கு மத்தியில் தன்னுடலை வைத்தால் கலை.அதை வெளிப்படுத்துபவர் இயக்குனர், அதற்கு பணம் போட்டவர் கலையுலகின் விற்பனர். வருத்தமாக இருக்கிறது. ஆயிரத்தில் ஓருவன் இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்களின் ப்ருஷ்ட்டம் , மார்பு, திறக்கத் தயாராய் இருக்கும் தொடைகள் இதை நம்பியே ஒட்டுமொத்த படமும் இயக்கப்பட்டிருக்கிறது.


இதில் வரும் ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் , காட்டுவாசிகளின் தலைவன் உட்பட பெண்களின் மேல் புணர்ச்சி நாட்டம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவகையில் பெண்கள் எக்காலத்திலும் ஆண்களால் இப்படித்தான் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று காட்ட முயற்சிக்கிறாரோ என்று எண்ணவும் வாய்ப்பில்லை அனைத்து பாத்திரங்களும் எந்த கணத்திலும் புணர்ச்சியைத் தவிர வேறு சிந்தனை எதுவும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

கதாநாயகியின் மீது மோதுவதும், உரசுவதும் அவர்களை இழிவு படுத்திப்பேசுவதும் இயக்குனர் பெண்களை எப்பார்வையில் பார்கிறார் என்று தெளிவாக விவரிக்கிறது. புரட்சித்தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் பாடலை ரீ மிக்ஸ் (அதற்கு சற்றும் தகுதியற்றவர்களாய்) செய்து கப்பலில் இவர்கள் பாடும் பொழுது ஒரு கும்பல் ரீமா சென்னின் மேலாடையை (கோட்) பிடித்து இழுக்கிறார்கள், முதலில் அவர்களை விரட்டும் இவர் பின்பு திறந்த முதுகை காட்டி ஆட ஆரம்பித்துவிடுகிறார், பிறகு மது அருந்திவிட்டு, அவர் புட்டத்தை காமிராவிற்கு காட்டி ஆடுகிறார். இயக்குனர் ரீமா சென்னின் முலைகளையும், தொடைகளையும் மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார். ஈசா ஈசா பாடலில் ரீமா குவிந்த மார்புடன், மண்டியிட்டு தன் உடைகளைத் தூக்கி தடவி நெளியும் பொழுது, பெண்கள் ஆண்களின் காம வேட்கையைத் தீர்க்கும் கருவிகள் உறுதி பட கூறுகிறார்.

பெண்களை ஆண்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என்ற நினைவுடனும் தன்னாலும் இப்படித்தான் பார்க்கமுடியும் என்ற உறுதியான சிந்தனையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கதை, திரைக்கதை இது எதுவும் தேவையில்லை. கொஞ்சம் வரலாற்று பூச்சாண்டி, நிறைய சதைகள் இவற்றை கலந்துகட்டி மனிதக்கடை விரித்திருக்கிறார் இயக்குனர்.

வரலாறு எனக்கு தெரியாதென்பவன் அவசியம் ஏற்ப்பட்டால் கற்றுக்கொள்வான். ஒரு முழு நீள திரைப்படத்துக்கு வரலாற்றை முன்வைத்திருப்பதாய் காட்சி படுத்திய நீங்கள் கொஞ்சம் வரலாறு படித்திருக்கலாம். இது அறிவுரையாக சொல்லவில்லை வேண்டுகோள்தான். இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் எப்படி ஒரு இனம் முழுவதையும் அவமானப்படுத்தி அடிமை ,விபச்சாரியின் பிள்ளைகள் என சொல்ல வைத்திருக்கிறது என்பது இயக்குனர் அறியாததல்ல.

ஒரு நடிகருக்கு, நடிகைக்கு தேதி வாங்க காத்திருக்கிறீர்கள், அவர்களின் சம்பளத்தை அள்ளித்தர உங்களின் பணப்பெட்டி எந்நேரமும் திறந்தே இருக்கிறது. அத்தனையும் ,ஒட்டு மொத்த உழைப்பும் இப்படி பாலியல், வரலாறு அனைத்தையும் குழப்பவா.

500 ரூபாய் செலவழித்தால் உளவியல், வரலாறு, என அத்தனையும் உங்கள் வீட்டு வாசலில் கிடக்குமே , புரட்டிப்பார்க்க உங்களைத் தடுப்பது எது. திரைப்படம் இயக்கத்தெரியும் என்ற நம்பிக்கையா. அது வெறும் தொழில் நுட்பம் மட்டும்தானே கதை, திரைக்கதை இதில் இயக்குனரான உங்களுக்கு எந்த பங்கும் இல்லையா.


எல்லாவற்றையும் பாலியல் குறிப்புகளாகவே அணுகும் இயக்குனர் வரலாற்றையும் அவ்வாறே குழப்பியிருக்கிறார்.

சரியான வரலாறும் தெரியாமல், உறுதியான கதைக்களமும் இல்லாமல் சாக்கடை வழிந்தோடுவதைப்போல் ஆபாசமாக நகர்கிறது திரைப்படம், ஒரே சதை வாடை. உன் மேல ஆசைதான் பாடலில் நாயகிகளை வக்கிரமாக காட்டுவதற்காகவே குடிக்கும் காட்சியை திணிக்க வைத்திருக்கிறது இயக்குனரின் குடியும் கொண்டாட்டமும் பற்றிய தவறான புரிதல். கதை நாயகன் பெண்ணை சுவாசிக்கும் கறித்துண்டாகவே பார்கிறான். மேஜராக வரும் ரவி எனும் பாத்திரம், கூலியை சிந்தனையற்ற கறித்துண்டாகவே பார்க்கிறது. இதை இயக்குனரின் பார்வையாகவே நான் காண்கிறேன். (படைப்பு வேறு, படைப்பாளி வேறு என்பதை இவ்விடத்தில் பொருத்தி பார்க்க முடியாது. நான் அறிந்த வரை இயக்குனர் பார்வையாளனாக தான் இயக்கிய திரைப்படத்தில் ஓரிடத்தில் கூட தெரியவில்லை. முழக்க முழுக்க பங்கேற்பவராகவே இருக்கிறார்).

ரீமா
சென்னின் முலைகளை அழகுப்படுத்தி காட்ட எடுத்துக்கொண்ட முனைப்பைக்கூட இவர்கள் கதை செய்ய எடுத்தொண்டதாக தெரியவில்லை.

முட்டாள் தனமான நகர்வுக்கு பின்னால் சோழர்கள் கிராமத்தை (நகைச்சுவையாகத்தான் உள்ளது) அடைந்த பின்னர் சோழ மன்னன் முன்னால் ஒரு தாய் முலையில் இரத்தம் தான் வருகிறது என்று பஞ்சப்பாட்டை பாடுவது வெகு செயற்கையாக உள்ளது. (இதற்கடுத்து சில காட்சிகளுக்கு பின் சோழ மன்னன் தன் பாலியல் தேவையை அதிகாரத்தோடு துயிக்கிறான். )

சோழர்கள் ஏன் அக்கிராமத்திலேயே பல்லாண்டு காலமாக தங்கி உள்ளனர்?
மந்திர மாயத்தில் கோள்களையே கட்டுப்படுத்தும் இவர்கள், ஏன் உணவிற்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்?
உணவிற்கில்லாமல் இருப்பவர்கள் எப்படி படையை வழிநடத்த முடியும்?
இவ்வளவு கஷ்டப்படும் இவர்கள் ஏன் தங்கள் நிலையை தற்போதுள்ள அரசுக்குத் தெரிவித்து [ஆராய்சியாளர் பிரதாப்போத்தன் உதவியுடன்) அதற்கான வாழ்வியல் ஆதாரத்தை பெற முயற்சிக்கவில்லை?]


ஒரு தனி மனிதனின் சிலைத்தேவைக்கு எப்படி தேசிய ராணுவம் அவ்வளவு உதவி செய்கிறது?

இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம்.

இதை எல்லாம் விடக் கொடுமை, ரீமா சென் சோழனிடம் (அரசர்) தான் ஒரு சேதி கொண்டுவந்திருப்பதாக கூறி அதை சொல்ல வேண்டுமென்றால், அரசர் அவளுடன் கூட வேண்டும் என்று எவருடைய உத்தரவாகவோ கூறுகிறார். இதைக் காரணமாக வைத்து மறுபடியும் உடல்பாகங்களை முன்னிறுத்துகிறார். தன் மக்களின் கவலைகளை முன் வைத்து அவளிடம் சல்லாபம் செய்யத் தயாரில்லை என்பதை வன்முறையாக வெளிப்படுத்திய மன்னன் அடுத்து வளம் வரும் நீ முடி சூட்டப்படுவாய் என்று ஆருடம் வந்ததும் அவளையும் புணர்ந்து அதற்கடுத்து ஆராய்ச்சியாளராக கதையின் முதலில் வரும் பாத்திரம் [அவள் அப்பா விட்ட ஆராய்சியையே அவளும் தொடர்ந்து அவளால்தான் இப்பயணமே என்பதும் காட்டப்படுகிறது. ] நீங்கள் அவளை நம்பியது தவறு எனச்சொல்ல வருகையில் அவளை சரியான ஆண் தேடி அலைந்தாயாமே வா வந்து படுத்து இன்பம் அனுபவித்து போ பாவம் அயல்நாட்டுக்காரி வேறு என்று பெரியமனதுடன் அனுமதிக்க அவளோ உண்மையை சொல்ல, அவள் படுக்க வரவில்லை என்பதறிந்து அவளுக்கு பைத்தியமோ , என் ஆண்குறியை வேறு பார்த்துவிட்டாளே ஏதேனும் பிழை வருமோ என ஆருடம் கேட்க்கச்சொல்கிறான். ஆக கஞ்சி இல்லாவிட்டால் வறுமை, அதன் விளைவை யோசிக்காத எரிச்சல், பின் வளம் வரும் என்ற செய்தி கேட்டவுடனேயே புணரும் வேட்கை. இதில் பார்வையாளாராய் என்னை மிகவும் வருத்தமும் கோபமும் அடைய வைத்தது பாண்டிய ரத்தம் ஊறிய பெண் சோழனிடம் பேசும் காட்சி.

அவள் உண்மையானவள்தானா என அரசர் அவளை பல விதங்களில் சோதிக்கிறார், வாள் சண்டை உட்பட. ரீமா அதில் நன்கு தேர்ச்சி பெற்றவர் . ஆனால் அத்திறமையை நம்பாமல், ரீமா தன் மார்பை குவித்து குவித்துக் காட்டி வா வா என்றழைக்கிறார். இது எனக்கு உச்சக் கட்ட கோவத்தை வரவழைக்கிறது. ஒரு பெண் ஆணை வெல்ல தன் உடலைத்தான் முன்வைக்கிறாள் என்று ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் கற்பித்து வரும் அதே செய்தியை (அது அவர்கள் எதிர்பார்ப்பாய் இருப்பதால்) இவரும் வைக்கிறார். அவ்வளவு திறமை, கூட்டாளிகளின் பலமிருந்தும் ரீமா ஏன் அரசனுடுன் கூடித்தான் அவரை கவிழ்க்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பது இயக்குனரின் வக்கிரத்திற்கு மட்டுமே வெளிச்சம்.

இப்போராட்டத்தில், அரசர் ரீமா வின் நிழலை கட்டுக்குள் எடுத்து, சேட்டைகள் செய்கிறார், அதில் விரக தாபம் பொங்க ரீமா குழைகிறார், பாதியில் நிறுத்திவிட்டு அரசர் இன்னும் வேண்டுமா, இன்னும் வேண்டுமா என்று கேட்பதும், தாபத்தில் மூழ்கி ரீமா ஆமாம் ஆமாம் என்று காமம் பொங்க கூறுவதும், ஒரு பெண் காமத்துக்கும் எப்படி அடிமை ஆக்கப்படலாம் என்று கற்றுக்கொடுக்கிறார் இயக்குனர் . சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் தங்கள் உடலின் மேன்மையரியாமல் பணத்திற்காக திறந்து காட்டுவது வருத்தமாக உள்ளது. கொண்டாடப்படவேண்டிய அவளின் உடலை பணக்கார முதலைகள் விலைபேசி, பின்பு அவளையே இழிவாக கண்டும், படுக்கைக்கு அழைத்தும் பீத்திகொள்ளும் இவர்களை பெண்கள் எவ்வாறு சகித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஆபாசம், வக்கிரமட்டுமல்லாமல் வன்முறையும் சேர்த்து குமட்டுகிறது. உயிரற்ற ஒரு சிலைக்காக இரக்கமே இல்லாமல், உயிருள்ள மனிதர்களை விலங்குகளை சுடுவதுபோல் சுடுகிறார்கள். அப்பொழுதும், ரீமாவின் கதாபாத்திரம் மிருகத்தனமாகவே நடந்து கொள்கிறது. அதற்கு காரணம் பாண்டிய வம்சாவளியில் பிறந்த அவருக்கு சிலையை மீட்பது ஒன்றே லட்சியம். கடைசி காட்ச்சியில் கோமாளித்தனமாக பாண்டியக்கால உடையணிந்து மேஜர் "TAKE POSITION" என்று பேசுவது அருவருப்பும், நகைச்சுவையாகவும் உள்ளது.

சத்தியமாக குழந்தைகளுடன் இத்திரப்படத்தைக் காண இயலாது.

வெறும் டிரைலர் மட்டும் காட்டி சினிமா வட்டாரத்தை ஏமாற்றி மேடையில் எல்லோரும் இவரை புகழும் படி செய்துவிட்டார் இயக்குனர் . பாவம் இவர்கள் அனைவரும் முழு திரைப்படத்தைப் பார்த்தால், பேசிய சொற்களை எப்படித் திரும்பப் பெறுவது என்று வருந்துவார்கள்.

இத்திரைப்படத்தை பார்த்ததால் எனக்கு கிடைத்த ஒரே லாபம், இனிமேல் இயக்குனர் செல்வராகவனின் திரைப்படங்களை காண்பதில்லை எனும் தெளிவான முடிவு.

எதை காட்டி ஆண்களை ஏமாற்றுவது, அவர்களை விலைபேசுவது, அவர்கள் மூளைகளை மழுங்கடிப்பது என்று முதலாளிகள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். பெண்ணுறுப்பு இன்றி இவர்கள் பிழைப்பு நடத்தவே முடியாது. பெண்ணின் உடலை காட்டி ஆண்கள், தாங்கள் விலைப்பேச படுகிறோம் என்று அறிந்தோ அறியாமலோ விலை போகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணையும் அவள் உறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அலையும் ஆண்களுக்கிருக்கும் உரிமைக் கூட பெண்ணுக்கிலாமல் செய்ய வரிந்து கட்டிக்கொண்டு செயல் படுகிறது என் சக இனமான ஆண் இனம்.

பெண்ணுடலை தங்கள் சுயநலத்திற்காகவும், வியாபார நோக்கோடும் கையாளும் ஆண்களுக்கு மத்தியில், தன் உடலுக்கு நேரும் வன் கொடுமைகளை அவள் எழுதும் பொழுது, பொறுக்க முடியாமல் பெரும்பான்மையான ஆண்கள் நாங்கள் எங்களுக்கு பெருமைவேண்டி எங்கள் உறுப்பை கையில் எடுப்பதாக விமர்சிக்கிறது. ஆண்கள் பெண்ணுறுப்பை கவர்ச்சிப் பொருளாகவும், காதலை விவரிக்கவும், அவளை வீழ்த்தவும் மட்டும் கையாளும் பொழுது, பெண் உடலால் மனதால் எதிர்கொள்ளும் சித்திரவதைகளை பெண்கள் தானே உண்மையுடன் எழுத முடியும்.

Wednesday, January 13, 2010

ஆணின் பெண் - பாகம் 3


தாயுரிமை தூக்கி எரியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைபடுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற பொருளாகி விட்டாள் என்கிறார் மார்கன்.

மார்க்ஸ் அவர்கள் இதற்கு கூடுதலாக பின் வருமாறு தெரிவிக்கிறார்: "நவீன காலக் குடும்பம், அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் கொண்டிருக்கிறது ....இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள்" என்கிறார். (இது கட்டாய விவசாய வேலை தொடர்புடையது)

இவ்வாறாக அரசியல், சுயநலம், அதிகாரம் ஆகிய பல காரணங்களால் பெண் ஆணுக்கு கீழ் என்ற அடக்குமுறை எண்ணத்தை பின் வந்த சந்ததியினருக்கு வழிமொழிந்திருக்கிறது வரலாறு. இதை இரு இனங்களும் அறியாமலே கற்ற ஒன்றாகிவிடுகிறது...

இதன் தொடர்ச்சியாக பெண் வெறும் காதல் துணையாகவும், காமத்துனையாகவும் திரைப்படங்கள் தன் பங்குக்கு சித்தரிக்கிறது. பெண் அழகு தேவதையாகவும், பார்த்த மாத்திரத்தில் விழும் ஆண் அவளை துரத்தி துரத்தி பித்து பிடித்த பாடல்களை பாடி அவன் வலைக்குள் விழ வைத்துவிடுகிறான். அத்துடன் திரைப்படம் முடிகிறது. காதல் சேர்கிறதா இல்லையா என்பதையே மையமாக வைத்தெடுக்கப்படும் திரைப்படங்கள், அவர்கள் திருமணம் செய்துகொண்டபின்னர் படும் அவஸ்தைகளையும், சந்திக்கும் மண உளைச்சல்களையும், முன்பு அவள் காலில் விழுந்து கெஞ்சிய ஆண் பிறகு எப்படி அவளை அடக்கி ஆள்கிறான் என்றோ தொடர்வதில்லை (வெகு சில படங்கள் 80 - 90 களில் இருக்கலாம்)..

திரைப்பட பாடல்கள் அணைத்திலும், பெண்ணின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆண் கவிஞர்கள் பாடி வருகிறார்கள். பெண்ணுக்குண்டான அத்தனை உணர்ச்சிகளுக்கும் (தாய்ப்பாசம், தங்கைப்பாசம், இன்னும் பிற) அவர்களே முதலாளியாக நின்று பாடுகிறார்கள். அதையும் மீறி பெண் அத்துறையில் வந்துவிட்டால், அவள் அத்துறையை சார்ந்த ஆணின் பாலியல் தேவையை தீர்த்துப் பெற்றதாக கூறுவார்கள். உலகமெங்கிலும் ஆணுக்கு பணம், பெண்ணுக்கு உடல் இந்த தீர்மானம் தான் ஆணாதிக்கத்தின் மைய்ய நோக்கு. இதுவே பெண்களின் உறுப்புகளுக்கு எதிராக அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. விளைவு ஆண் வரலாறு, ஆண் மதம், ஆண் இலக்கியம், ஆண் அதிகாரம், ஆண் அரசியல், ஆண் சர்வாதிகாரம், ஆண் வன்முறை.

(சிறு குறிப்பு: கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் கூட ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கல்ல)