Thursday, December 3, 2009

கற்பின் பெயரால்


'கற்பு' - உலகில் உள்ள வார்தைகளில் மிகவும் பெண் இயல்பு (ஃபெமினிஸ்டிக்) நிறைந்தது. பெரும்பாலும் 'கற்பு' எனும் குறிப்பு பெண்ணை ஒட்டிக்கொண்டுதான் வருகிறது. அந்த குறிப்புக்கு உண்டான 'குறியீடுகளுக்குள்' அவள் விழவில்லையென்றால் அவள் 'வேசி'..என்னுடைய இந்த 'கற்பின் பெயரால்' எனும் சிற்பம்:- ஒரு பெண் தன் இரு கைகளையும் தன் மார்பகங்களின் முன் குறுக்காக பிடித்துள்ளாள். அவளுடைய கழுத்து நீண்டு இருக்கிறது. கழுத்தின் மேல் சிறைக் கம்பிகளுக்கு நிகரான சதுர வடிவ முடக்கு (பிளாக்) உள்ளது. அவள் தலைமேல் ஒரு கூடை. கூடைக்குள் ஓர் ஆண் படுத்துக்கிடக்கிறான். பால்வகை ஒழுக்கத்தின் (செக்ஷுவல் மொராலிட்டி) பெயரிலும், கற்பின் (சாஸ்டிட்டி) பெயரிலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சித்தரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை நளாயினியின் கதையைப் படித்தபோது, எனக்கு சில வினாக்கள் எழுந்தன. ஒரு பெண் தன்னைப் பத்தினி என்றும், பதிவிரதை என்றும் நிரூபிக்க எத்தனை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாள்? நம் புராணங்களில் 'பஞ்சகன்னிகள்' என்று ஐவரைக் கூறுவர். பின்னர் அவர்கள் பத்தினித் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரு கணவனுக்கு மேல். புராணக் காலங்களில் பல்மனை மணம் (பாலிகாமி) வழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக இது விளங்குகிறது. பின்னர் சொத்துக்கள் பிரிப்பதில் விவகாரங்கள் எற்பட, முறைகள் மாற்றப்பட்டதாகவும், மரபுகள் தோன்றப்பெற்றதாகவும் கேள்வி. உங்கள் முன் நளயினின் கதையை முன் வைத்து சில கேள்விகள்:-

ஒரு முறை ரிஷி மௌதகல்யா (நளாயினியின் கனவர்) தன் மனைவியின் சகிப்புத்தன்மையும், அன்பையும் சோதிக்க எண்ணி தனக்குத் தானே தொழு நோயை வரவைத்துக்கொண்டு தான் உண்ட அந்த எச்சில் தட்டில், எப்பொழுதும் போல் தன் மனைவி சாப்பிடுகிறாளா என்று சோதிக்கிறார். சற்றும் முகம் சுளிக்காமல், நளாயினி அதே தட்டில் உண்கிறாள். அப்படியும் திருப்தி ஏற்படாமல், ரிஷி தன்னை ஓர் வேசியின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல சொல்கிறார். நளாயினியும் அவரை ஓர் கூடையில் சுமந்து கொண்டு சென்று, அவரை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்துக்கிடக்கிறாள். பின்னர் அவரை சுமந்து கொன்டு வீடு திரும்புகிறாள்.

இப்படி சோதனையெல்லம் அவள் வென்றதால், ரிஷி மனமகிழ்ந்து 'என்ன வரம் வேண்டும் கேள்' என்கிறார். அப்பொழுதும் அவள் அவர் மேல் கொண்ட காதலால், ரிஷி ஐந்து உருவங்கள் எடுக்க வேண்டும் என்றும், அந்த ஐந்து உருவத்திலும் அவர் அவளை அனுபவிக்கவேண்டும் என்றும் வேண்டுகிறாள். பல வருடங்களாக இந்த உலகத்தை காதலும் களிப்புமாக சுற்றிவருகிறார்கள். ஆனால் நளாயினிக்கு அவைப் போதவில்லை என்றும், ஆகையால் ரிஷி கோபம் கொண்டு, அவள் அடுத்தப் பிரவியில் ஐந்து கணவர்களுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்றும் சபிக்கிறார்.

இதில் மறைமுக பொருளும், நெறிகளும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என் கேள்வி - ஏன் பெண் மட்டும் இப்படி சோதிக்கப்பட வேண்டும்? பின்னர் சபிக்கப்படவேண்டும்? இக்கதைகளை முன்மாதிரியாக கொன்டு பெண்கள் நடத்தபடவேண்டும்?

புராணங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால், அவர்களுக்கு சாதகமாக விதிகளை உருவாக்கிவிட்டார்களோ? எனக்கு ஓர ஐயம்:- புராணங்கள் பலருடைய கருத்தை உள்ளடக்கி புனையப்பட்டதாக இருக்ககூடும். ஆகையால் தான் கதாப்பாத்திரங்களுக்குள் அத்தனை முரண்பாடு.

ஓரிடத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்று படைத்துவிட்டு, வேறொரு இடத்தில் அவள் முன் ஜென்மத்தில் நளாயினி என்றும் ரிஷியின் சாபத்தால் ஐந்து கணவர்களைப் பெற்றாள் என்றும் நியாயப்படுத்தப்படுகிறது. இது முரண்பாடுதானே? பெண் சாபம் பெறுவதற்காகவே சபிக்கப்பட்டவளா? கருத்துக்கள் ஆணாதிக்க போக்கிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. நளாயினியின் பதி பக்திக்கு இத்தனை சோதனைகள் வைக்கப்பட்டது நியாயமா? ஏன் ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை வழிபட வேண்டும்? ஏன் தன்னை நியாயப்படுத்த வேண்டும் தான் களங்கமற்றவள் என்று நிரூபிக்க தீயில் குதிக்க வேண்டும்?

எப்பேற்பட்ட சகிப்புத்தன்மையை பெண்கள் மேல் திணித்திருக்கிறார்கள், கதைகள் மூலம்?

கற்பின் பெயரால் எங்களை கடவுளாக்கவும் வேண்டாம், களங்கத்தின் பெயரால் எங்களை மிதிக்கவும் வேண்டாம். ஆண்களுக்கு நிகராக புகைக்கவோ, குடிக்கவோ, பலபேருடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி எழுப்படும் கேள்விகள் அல்ல இவை. சிந்தியுங்கள்..யாருடைய கருத்துக்கள் மரபுகளாக இந்த சமுதாயத்தில் உலா வருகிறது? விதிகளை கடவுள் விதித்தார் என்றால், எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா? நம் நாட்டிலேயே சில குலமரபுகுழுக்களை (உ.ம். கோண்டு சமுதாயம்) சார்ந்தவர்கள் 'பல்மனை' கலாசாரத்தைப் பின்பற்றுவதாக படித்திருக்கிறேன். மேலும் முற்காலத்தில் 'குலத்தலைவி' (matriarchy) முறைதான் இருந்ததெனவும், பின்பு குலத்தலைவன் (patriarchy) முறைக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. (உ.ம் சதவாகன அரசர்கள் / பல்லவ முன்னோர்கள் - கௌதமிபுத்ர, வசிஸ்டிபுத்ர, ஹரிதிபுத்ர போன்ற பெயர்கள்)

'குலத்தலைவி' முறையும் அல்லாமல் 'குலத்தலைவன்' முறையும் அல்லாமல் தனி நிலை சமுதாயம் வேண்டும். (neutriarchial society).

1 comment:

  1. http://irapeke.blogspot.com/search/label/BATTLE%20OF%20SEXES

    Please read my views on this.

    Vijay

    ReplyDelete