Tuesday, July 6, 2010

கவிதை நூல் திறனாய்வுக் கூட்டம்


கள்ளக்காதல்’ - (வசுமித்ர -ஆதிரன்)
’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ (வசுமித்ர )

- கவிதை நூல்கள் திறனாய்வு


நாள் : 20 ஜூலை 2010, செவ்வாய்
நேரம் : மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணாசாலை, சென்னை-2.

பங்கேற்கும் தோழர்கள் :

தமிழச்சி தங்கபாண்டியன்
ரமேஷ் பிரேதன்
கவின் மலர்
வசுமித்ர
ஆதிரன்

Friday, July 2, 2010

கவி பிம்பம்


வனயிளமுலைகளை
கவிஞர் வார்த்தையுதிர்க்கையில்
மரங்கள் கூடி மூட்டும் காட்டுத்தீயை வரைந்துவைத்தேன்

உதடுகளுக்குவமையாய் அவன் விரல்கள் பழம் தேடி அலைகையில்
வன்மம் கிழித்தொரு சொற்கள் பொழியும்
செந்நா சுழண்டெழுந்தது
வனச்சர்ப்பமென

திரு கவிஞர்
கழுத்தைச் சுற்றி வரிகள் பதித்து
தலை புதைய இடம் வேண்டி நின்ற கணம்
புன்னகைத்தது
பணிய மறுக்கும் குரலொன்று

இடையின் வளைவுகளுக்கு
நுரையடங்கும் அலைகளை
முன்னிருத்தினார் கவிஞர்
பெண் மதத்தில்
பிறக்கப்போகும் சிசு
காலூன்றி நடக்கும் காலம் வரை சுமந்து செல்லும்
பெரும் பேழையை காட்சிக்கு வைத்தேன்

என்னிரு பாதங்களை பற்றிக்கொண்டு
இவ்வுலகையவன் தாரைவார்க்கையில்
சட்டகத்திற்கு வெளியில் நிற்கும்
என்னொரு
காலை மடித்து
சிலுவை செய்தேன்
பாடிய கவிச்சொற்களால் ஆணிகள் செய்து
அறைந்தேன்
அவனிரு கைகளை

என்னுடல்
என்மொழி
என் கனா
விடுதலை
நான்.

கல்லெறியும் குளம்.



கரையான்கள் தீண்டாத கதவுகளுக்கு பின்னால்
புனிதம் காத்திருந்தது

உதடுகள் தொங்க முத்தம் கேட்டு


காத்திருக்கிறது

புனிதம்
வியர்வை பொங்கும் கரங்களை
பிசைந்தவாறு

முத்தத்தின் வாசனை

முத்த

வாசனை

புனிதத்தின் துர்மணம்

முத்தம்

வருந்தி விலக

புனிதம் அறிவித்தது
உங்களில் எவர் புனிதர் இல்லையோ
அவர்களுக்கே என் உதடுகள்...
மதத் தரகர்

தூபமிசைப்போர்

கடவுளின் காவற்காரர்

துரோகத்தை மந்திரமாய் ஈணுபவர்

கொலையாளி

வரலாற்று விற்பனன்

ஜனநாயகவாதி
கொள்கை பரப்பாளன்

அரசியல்வாதி
கலைக் காப்பாளர்கள்

ஒழுக்கம் செய்து விற்பனைக்கு வைப்போர்

தசைக்கு கீழ் ஆடை அணிவோர்

கைகளில்

அரிதாரம் வழி வழியும் பாவைகள்

மிதக்கிறது மறைக்கப்பட்ட வரலாற்று பக்கஙகளில்

துர்மணம் சூழும் பெயரற்ற கண்ணீர்


எல்லோருக்கும் சாத்தியமாயிற்று

ஒரே வானம்

ஒரே மௌனம்

ஒரே சொல்

Thursday, July 1, 2010

செம்மொழியும், தமிழ் வாழ்வும்...


சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி..கிளியே
செம்மை மறந்தாரடி. - மாகவி பாரதி.



தமிழ் பேசிச்சாவடைந்த மக்களை நோக்கி, வாழ்வாதாரம் ஏதுமின்றி பேச்சற்ற மக்களின் முன் ஓங்கியொலிக்கிறது..செம்மொழியான தமிழ் மொழியே..


இரண்டொரு நாட்களுக்கு முன்பு தான் செம்மொழி கீதம் கேட்டோம். அதில் தமிழ் உச்சரிப்பையும், தமிழ் இசையையும் தேடவேண்டியிருந்தது. அதைக் கேட்ட பின்பு இதையா செம்மொழிப்பாடலென்று சொல்கிறார்கள் என சந்தேகம் வந்தது. அதனால் மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டோம்.


அந்தப் பாடலில் (பொருந்தச் சொல்வதென்றால் கூச்சல் ) முதலில் எங்களுக்கு ஏற்பட்டது வருத்தம். உலகில் உள்ள அத்தனை இசைக் கருவிகளும் காதுகளை நோக்கி படை எடுப்பது போன்ற ஒரு மிரட்சி. தமிழிசை என்றோ தமிழர்களுக்கான இசை என்றோ சற்றும் உணரமுடியாத ஒரு இசையாகவே உள்ளது அது. பார்ப்பன கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் சூபி இசையும் சேர்த்து அமைத்த இசையில் எங்களால் தமிழ் மணத்தை உணரவேமுடியவில்லை. அதன் பாடலாக்கத்திலும் நவீனத்துவம் மேலோங்கி இருக்கிறதே தவிர, தமிழ் மண் சார்ந்த காட்சிகள் ஓரிரு இடங்களில் (கிராமிய நடனம், பொய்க்கால் குதிரை, கே.. குணசேகரனின் குரல் மற்றும் முகம் ) மட்டுமே இடம்பெறுகின்றன. பாடுபவர்களில், இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களின் உடல் மொழியில், உடையில் கூட (ரஹ்மானின் உடை உட்பட) மேற்கத்திய தாக்கம் மேலோங்கி இருக்கிறது. இடையில் ஒரு குழந்தை சுவற்றில் அம்மா அப்பா என்று எழுதி வைக்கும் காட்சிகூட நவீன பணக்கார வாழ்க்கைமுறையை ஒட்டி இருக்கிறதே ஒழிய (மிகவும் செயற்கைத்தனம்), தமிழ் வீடு என்று சொல்ல இயலவில்லை. கிராமியப் பாடகியான மதுரைச் சின்னப்பொண்ணுவிற்கும் கூட அரிதாரம் பூசி அவருடைய மண் வாசனையையும் பிடுங்கி விட்டார்கள். உள்ளபடி சொன்னால் தமிழ் மக்களல்லாதோர் இப்பாடலைக் கேட்டும், பார்த்தும் வரும் முடிவு தமிழ் மக்கள் வாழ்வு நவீன நாகரீகத்தின் உச்சியில் இருக்கிறது. என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

மண்ணின் இசையை கிராமத்தில் தொடங்கி உலகின் கடைக்கோடி வரை எடுத்துச்சென்ற இளையராஜாவை விடுத்து, இப்படி நவீனத்தின் கையில் செம்மொழி கீதம் இசைக்கபெற்றது வருத்தத்துக்குரியது. வெள்ளைக்காரன் அங்கீகரித்த ஒரே காரணத்தால் ரஹ்மானுக்கு இந்த வாய்ப்புக் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. பார்பனிய கர்நாடக இசையைக் கூட அதன் சாயல் ஏதுமின்றி மீட்டெடுத்து, திரை இசை பாடல்களாய்த் தந்த இசைஞானியை எவ்வாறு கலைஞர் நினைவு கூறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பாடும் இசைக்கலைஞர்களின் குரலும், இசைகருவிகளின் இசையும் எவ்வித உறுத்தலும் இன்றி ஒருங்கிணைத்து அவர் தந்த பாடல்கள் தமிழனுக்கு உலகளாவிய பெயர் பெற்றுத் தந்துள்ளது யாவரும் அறிந்ததே ஆனால் இச்செம்மொழி கீதத்தில் இசைக்கருவிகளின் ஆதிக்கமும், நாகரீகத்தின் ஆதிக்கமும், பார்ப்பனிய இசை மற்றும் இசைகலைஞர்களின் ஆதிக்கமுமே காண முடிகிறது.

ஒருவேளை அதைத் தான் நாம் தமிழிசை என்று கொள்ள வேண்டுமோ. இதில் மகாக் கொடுமை, இடையில் வரும் ராப் வகைப் பத்தி. கிராமங்களிலும் கூத்து என்ற வகைப்பாடல்களில் 7 1/2 கட்டையில் பாடுவார்கள், ஆனால் அது கூச்சல் போல் இருக்காது, இங்கே ஓர் அம்மணி 'ஒபேரா சிங்கிங்' என்ற ஒரு மேற்கத்திய பாணியில் 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்று ஆங்கில தொனியோடு கூச்சலிடுகிறார்.

இதை 'தனியார் ஒலிநாடா' (Private Album) என்ற வகையில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், அதுவும் உலகளாவிய நவீன இசைப் போக்கை மனதில் கொண்டு தொலைக்காட்சிகள் அல்லது திரையரங்குகளில் ஒளிபரப்ப வைத்துக்கொள்ளலாமே ஒழிய, 2000 வருட தொன்மையை பறை சாற்றும் நிகழ்வாக அறிவிக்கப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கான இசையாய்க் கொள்வது தமிழ் இசையை அவமானப்படுத்துவதற்கு சமம்.
இதற்கு தமிழக அரசு செலவு செய்திருக்கிறது.

செம்மொழி மாநாட்டுச் செலவு 300 கோடிகள் அல்லது 500 கோடிகள் என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு காசைக்கொட்டி
மொழிக்குசெய்ய வேண்டியது அவ்வளவு ஒன்றும் உயிராதார பிரச்சினையில்லை. ஆனால் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கையின் பிரச்சினைகள் அவர்களை பேசமுடியாதவர்களாய் ஆக்கியிருக்கிறது. ஆக்கப் பூர்வமான வழிகளில் தமிழக அரசு
மக்களுக்குச் செலவு செய்திருக்கலாம்..இதை உரத்த குரலிலும் சொல்லலாம் ஏனாயின் அது அவர்களின் வரிப்பணமே.

{செம்மொழிப் பாடலுக்கு இயக்குனர் என்று கௌதம் வாசுதேவ மேனன் என்றதும் சந்தேகம் தெளிந்தது. தமிழ் படம் எடுக்கமாட்டேன் என ஒரு வாரப்பத்திரிக்கையில் இவர் படம் போட்டு எழுதியிருந்தார்கள். புத்தகம் வாங்கி படிக்கும் முன்பே மனதில் தோன்றியது அவர் எப்போது தமிழ் படம் எடுத்தார்.}

- கொற்றவை - வசுமித்ர

Sunday, June 6, 2010

திருமணங்களும் சந்தோஷங்களும்.




"திருமணமான பெண்களுக்குரிய சந்தோஷம் ஓர் ஆணின் சந்தோஷமாகவே விதிக்கப்படுகிறது...."

ஓர் உயிர் இந்த பூமியில் பிறக்கும்பொழுது அது பெண்ணாய் இருப்பின் அவளைச் சுற்றி பல ஆண் எஜமானர்கள் பல்வேறு கட்டளைகளுடன் காத்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே அவளுக்கு, பெண்மைக்குரிய கட்டளைகள் ஆரம்பம் ஆகிறது. ஆண்களுக்கு கீழ் படியும் தன்மையை வலியுறுத்தியும் அல்லது ஆணின் காமப்பார்வையிலிருந்து அவளை தற்காத்துக்கொள்ளும் பொருட்டும் மட்டுமே எல்லா வழிக்காட்டுதலும், விதிகளும் உள்ளது.

குழந்தையாய் அவள் விளையாடும் பொருள்களிலிருந்து வளர்ந்து அவள் ஒரு தாயான பின்பும் கூட பெண்ணுக்கு உகந்த பொருள் எது, சந்தோஷங்கள் எவை, கடமைகள் எவை, பாசப்பிணைப்புகளின் நடத்தை விதி என எல்லாம், ஆணின் செயல்பாடுகளுக்கு எந்த குறுக்கீடும், தொந்தரவும் ஏற்படாத வண்ணம் வரையப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாய் ஒரு குழந்தை, தான் கண் விழிக்கும் போதெல்லாம் தாய் தோசை சுட்டுக்கொடிருப்பதைத் தான் பார்க்க நேரிடுகிறது. மறைமுகமாக, தன்னுள் பெண்மைக்குரிய கடமைகள் இவை இவை என அது உள்வாங்கிக் கொள்கிறது. தனக்கான விளையாட்டுப்பொருளாய் சமையலறை சாதனங்கள், பொம்மைகளை அலங்கரிக்கும் விளையாட்டுப் பொருள்கள் என வாங்கிக்கொண்டு தன் தாயைப் போலவே சமைப்பது, பொம்மைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்புதல்..தாயின் இன்ன பிற அன்றாட செயல்களை பொம்மைகள் வைத்து விளையாடி பழகிக்கொள்கிறது. மற்றொரு புறத்தில் ஆண் குழந்தை தந்தையை வழிகாட்டியாய் கொண்டு சாகச விளையாட்டுகள், இயந்திர பொம்மைகள் என்று விளையாடி, தான் ஆண் என்பதற்கான முத்திரையையை நிறுவத் தொடங்குகிறது.



இப்படி மழலையிலேயே அந்நியமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் பிற்காலத்தில் தன் இருப்பு பற்றிய நிலை என்னவென்று புரியாமல் ஆணைச் சார்ந்துதான் தனக்கு அங்கீகாரமும், அவனோடு ஒத்து வாழ்தலே தன் பிறப்பின் பயன் எனவும் உணர்த்தப்படுகிறாள். அதே மனநிலையோடு திருமணத்திற்கு உடன் படுத்தப்படுகிறாள், எழுதப்படாத அடிமை சாசனத்தில் கையெழுத்திடுகிறாள். அதுவரையில் தந்தையின் கணவுகளுக்காக உடல் சுமக்கும் பெண்ணினம் பிறகு கணவனின் அந்தஸ்த்தை நிலைநாட்டும், பேணிக்காக்கும் பொருட்டு தன் உடலை மாற்றி அமைக்கிறது. எப்பொழுதும் அது தன் உள்ளக் குரலை 'ஒலி வடிகட்டி' செய்தே வைத்திருக்கிறது.


திருமண வாழ்க்கை தரும் சந்தோஷங்களாக அவளுக்கு கற்பிக்கப்படுவது கெட்ட பழக்கம் இல்லாத கணவர் (அதாவது குடி, புகை பழக்கம் அல்லாதவர்), வசதியாக வாழ பெரிய வீடு, தோளுக்கும், கழுத்திற்கும் இடைவெளியே தெரியாத அளவுக்கு நகைகள், பட்டுப் புடவைகள், கார்..இப்படி வசதிகள் நிறைந்த வாழ்க்கை. இவற்றை பெற்றுத் தரும் கணவன் கடவுளுக்கு நிகரானவன் (ஆம் அங்கேயும் பெண் கடவுள்களின் நிலையில் பெரிய வேற்றுமை இல்லை). தன் கணவனின் அந்தஸ்த்தை சித்தரிக்கும் ஒரு விளம்பரப் பலகையாக மனைவிகள் உலா வருவார்கள், அவருக்கு பெற்றெடுத்த குழந்தைகளை அவர் பெயரை காப்பாற்றும் எதிர்காலத்திற்கான முதலீடாய் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள். அதுவே தன் வாழ்க்கையின் பேராக எண்ணி பூரித்து கடமை உணர்ச்சி பொங்க உருகிக்கொண்டிருப்பார்கள்.


இது போன்ற பெண்கள் எப்பொழுதாவது தன் இருப்பு பற்றிய கேள்விகள் எழுப்பியிருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி தனக்கென்று ஒரு இருப்பு இருக்ககூடும் என்ற உண்மையைக் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. தான் ஏன் எப்போதும் ஆணைச் சார்ந்தே தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளவேண்டியுள்ளது என்று கேள்வி எழுந்தபோதுதான் பதில் கிடைத்தது. ஒரு ஆணின் சந்தோஷமே பெண்ணின் சந்தோஷமாகவும், ஆணின் லட்சியங்களே பெண்ணின் லட்சியமாகவும் ( குறிப்பாக திருமணத்திற்கு பின் ) கட்டமைக்கப்பட்டிருப்பதை உணரமுடிந்தது.

ஆம் குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டவுடன் ஒரு ஆண் தன் தலையில் தானே கிரீடம் ஏற்றிக்கொள்கிறான். இன்னாருக்கு மகனாக அறியப்பட்டிருக்கும் ஆணுக்கு, தான் என்ற அடையாளம் மிக அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. அதுவும் பொருளாதார நிலைப்பாடு சார்ந்தே இருக்கிறது. திருமணம் செய்துக் கொள்கிறான். குடும்பத்திற்காக உழைக்கிறேன் என்று கூறிக்கொண்டு தனக்கான முத்திரையை பதிக்கும் செயல்களை துவங்குகிறான். அதற்கு சம்பளமற்ற காரியதரிசியாக மனைவியைப் பயன்படுத்துகிறான். மனைவியும் ஆஹா என் கணவர் எவ்வளவு உழைக்கிறார் என்று பெருமை பாடிக்கொண்டு அவனுக்கான அத்தனை பணிவிடைகளையும் செய்கிறாள். சில இல்லங்களில் அவளும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுகிறாள். அப்பொழுதும் கணவனுக்கு மட்டுமே சலுகைகள் உள்ளது. நேரம் காலமின்றி அவர் வீடு திரும்பலாம், வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். தொழிலதிபராய் இருந்தால் வீடென்ற ஒன்றை மொத்தமாக மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு, வணிகம் பேசிக்கொண்டே திரியலாம் நட்சத்திர ஓட்டல்களில். மனைவிக்கு லஞ்சமாய் நகைகள், உயர்ரக கார், வருடாந்திர சுற்றுப்பயணம் என கிள்ளிக்கொடுத்துவிட்டு மீண்டும் வேலை நிமித்தமாக ஊர் சுற்றலாம். கணவர்கள் தன் கீழ் பணிபுரியும் பெண்களை படுக்கைக்கு அழைக்கலாம், கள்ள உறவு வைத்துக்கொள்ளலாம். அவ்வப்போது பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் மனைவியை அழைத்துக்கொண்டு போகலாம்.

நீங்களும் அவர் பெருமைகளை பறை சாற்ற நன்கு அலங்காரம் செய்துக் கொண்டு போவீர்கள். அவருக்கு கிடைக்கும் பெயரை உங்கள் அடையாளமாக எண்ணி மகிழ்வீர்கள். நம் கணவர் நமக்காக எவ்வளவு செய்கிறார் என்று எலும்புத்துண்டை மென்றுக்கொண்டிருப்பீர்கள்; நீங்கள் நாயாக மாற்றப்பட்டதுதெரியாமல்.

மனைவிகளே நீங்கள் மனைவிகளாய் இருப்பது உங்களுக்கு உகந்ததாக இருக்குமாறு ஆண் முதலாளிகள் கலாச்சாரத்தின் பெயர் கொண்டு நிறுவியிருக்கிறார்கள். அந்நிறுவனத்தில் முதலாளிக்குரிய கடமைகளை அவரே ஏற்றுக்கொண்டு, தொழிலாளிக்குரிய கடமைகளை பேருள்ளம் கொண்டு உங்களுக்கு கொடுக்கிறார்கள். உங்களின் கடமைகளை நீங்கள் ஆற்றும் பொருட்டு உங்களுக்கு கூலி அந்தஸ்த்து எனும் பெயரில் வழங்கப்படுகிறது. நீங்களும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள், உங்களுக்கான உன்மையான சந்தோஷம் என்னவென்றறியாமல். அப்படி நீங்கள் உங்களுக்கான அடையாளத்தைக் கண்டு கொண்டீர்களானால் (இந்த ஆணுலகில் அதுவே மிக அரிதான ஒன்று), அதற்காக நீங்கள் உழைக்கத் துவங்கும் பொழுது, கணவரின் பேரன்பு வெளிப்படும். உங்களைக் கட்டி அணைத்து முத்தங்களாய் பொழிவார், அம்முத்தங்கள் என்றும் இல்லாதவாறு கூர்மைக் கொண்டதாக இருக்கும். சொற்களால் ஆன முத்தம் அல்லவா, அப்படித்தான் இருக்கும்.


நான் எனைக் கண்டுக்கொண்டேன் என்று உண்மையை நிதர்சனமாக போட்டுடைப்பீர்கள். 'நீ' என்ற ஒன்று சாத்தியமில்லை என்பார் கணவர். நான் குடும்பத்துக்காகவே என்னை அர்பணித்துக்கொன்டு மாடாய் உழைக்கிறேன், நன்றி இல்லாமல் நடந்துக் கொள்ளாதே என்பார். ஆம் அவர் உழைப்பு குடும்பத்துக்காக, உங்கள் உழைப்பு உங்கள் உடல் திமிருக்காக மனைவிகளே. நீங்கள் உங்கள் விருப்பங்களை அவ்வப்போது அவர் காதில் போட்டுக்கொண்டே இருப்பீர்கள், அவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பார். ஒரு நாள் பொறுமை இழந்து, படுக்கை அறையில் 'வேலை நிறுத்தம்' செய்வீர்கள் அப்பொழுதுதான் இழப்பு நோட்டம் பெறும். நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் முதலாளி தான் தரும் கூலி, சலுகைகள் இவற்றை கணக்கு வைத்து பேசுவது போல், குடும்பத் தலைவரான முதலாளி மனைவித் தொழிலாளியிடம் கணக்குகள் வைப்பார் "நான் என்ன குறை வைத்தேன் உனக்கு, நீ கேட்ட எல்லாம் செய்தேனே, அதை வாங்கித் தந்தேன், இதை வாங்கித் தந்தேன் என்பார், நான் சம்பாதிக்கும் அணைத்தும் உனக்கும் நம் குடும்பத்துக்கும் தானே" என்பார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது கணக்கு அணைத்தும் பொருளும், பொருளாதாரமும் சார்ந்தே இருப்பது. பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய எத்தனிக்கும் கணவர்கள் ஏன் ஓர் உறவுக்கு அடிப்படைத் தேவையான அன்பு, அக்கறை, சமத்துவம், காதல் சார்ந்த விருப்பங்கள் இவற்றின் தேவையையும், அதில் உள்ள குறைகளையும் பொருட்படுத்துவதில்லை. தனக்கு பெருமைத் தரக்கூடிய பொருள்களை ஈட்டி அதை மனைவியின் சந்தோஷமாய் கற்பித்து தன்னை உயர்த்திக்கொள்ளவும், தன் வாரிசை தன் பெயர் சொல்ல வளர்த்தெடுக்கவும் தான் ஆண்களுக்கு மனைவிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு போதும் அவள் துணைவியாக இருக்க முடிவதில்லை. மனைவியாக இருப்பதால் தான் கடமை உணர்வு மிக்கவளாக அவள் செயல்பட வேண்டியுள்ளது. துணைவியாக (Life Partner) கணவர் நினைத்தாரானால், கூட்டு முடிவுகள் எடுக்கப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் சேர்ந்தே முடிவெடுப்பார்கள். பொருளை முதன்மைபடுத்தாது, கணவன் மனைவியின் அருகாமையை உன்மையில் விரும்புவதாயின் வயிற்றுப்பாட்டிற்கு சிறிதும், அடிப்படை தேவைகளுக்கும் மட்டுமே பொருள் ஈட்டினால் போதுமே இதை மனைவியிடம் பேசி 8 முதல் 10 மணி நேர உழைப்பு போக மீதமுள்ள நேரத்தை மனைவியுடனும், பிள்ளைகளுடனும் செலவிடலாமே. அதுவல்லாது, தன் பேராசையை, பணம் மற்றும் புகழ் வெறியை குடும்ப நலன் என்று சாயம் பூசி மனைவியின் விருப்பு வெறுப்பு அறியாது, தன் பேராசையை அவள் மேல் திணித்து அதற்கு அவளையும் பயன் படுத்திக்கொள்ளும் மனப்போக்கே இங்குள்ள பெரும்பான்மையான கணவன்மார்களுக்கு இருக்கிறது. மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளோமே என்று கணவர்கள் கூறுகிறார்கள்.

அது சுதந்திரம் சார்ந்த விஷயமாக என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ளும் ஒரு செயலே மனைவியும் வேலைக்குச் செல்வது. எவ்வளவு பொறுப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையில் அவள் வேலை செய்ய வேண்டியுள்ளது. அலுவலகப் பணியின் பெயர் சொல்லி ஆண்கள் எடுத்துக்கொள்ளும் அத்தனை சுதந்திரத்தையும் பெண்கள் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. சுதந்திரம் என்ற பெயரில் அவளுக்கு கிடைப்பது மனச் சோர்வு மட்டுமே. சில குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும், அங்கேயும் பொருளாதாரம் சார்ந்தே அந்த நிலை இருக்கக்கூடும். இருவரும் சமம் என்ற நிலையில் கணவன் மனவி உறவு அமைவது அபூர்வமே.

ஒருவேளை மனைவிக்கும் பெரும் பொருளாசை இருக்குமாயின், அதற்கும் ஆண்கள் பெண்களை பொருளாசைக் காட்டி அவளை அடிமைப்படுத்த ஆதியில் போட்ட விதையே காரணம். எப்படி முதலாளிகளின் சாதுர்யங்கள் அவர்களுக்கெதிராகவே திரும்பிவிடுகிறதோ, அதுபோல் ஆண் சமுதாயம் தோற்றுவித்த பொருள்சார்ந்த சமுதாய அங்கீகாரத் தேவையின் அரிப்பு தொடக்கத்தில் சொரிந்து கொடுக்கும் பொழுது சுகமாகத்தான் இருந்தது. நாளடைவில் புரையோடிப்போன ரணமாகி, மருத்துவம் செய்ய முடியாத அளவுக்கு கைவிடப்பட்ட நிலைக்கு வந்துள்ளது. இதில் ஆண்களும் சிக்கித் தவிப்பது பரிதாபமே.

திருமணம் மூலம் நாம் கூட்டு உறவுக்குள் நுழைகிறோமா அல்லது எதோ நிறுவனத்தில் ஒப்பந்த வேலை மேற்கொள்கிறோமா? பொறுப்புகளை பிரித்துக்கொள்கிறோம் என்ற பெயரில் எப்போதும் ஆண் தனக்கு வசதியான பொருளீட்டும் பொறுப்பை மட்டும் ஏன் எடுத்துக்கொள்கிறான்? உத்தியோகம் புருஷ லட்சணம்...இல்லையா அது மட்டுமே அவனுக்கு அங்கீகாரம் கொடுக்கும் என்பதால் தானே? உறவு சார்ந்த முறை என்றால் அங்கு காதல், பந்தம், நேரம் எல்லாம் அன்பை முதன்மைப் படுத்தி இருக்கவேன்டும், ஆனால் குடும்ப உறவுகள், லாப நோக்கோடு இயங்கும் நிறுவனங்களைப் போல் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தியே அமைக்கப்படுகிறது (நல்ல உ.ம் - வரதட்சனை). அன்பை முதலீடாக கொள்ளும் குடும்பங்களில் பெரிதாக பொருள் ஈட்ட வேண்டியதில்லை என்று கணவன் மனைவி இருவருமே சேந்து முடிவெடுப்பார்கள். (இது இருவருக்கும் பொருந்தும், ஆனால் மனைவி பொருளாதரம் பெரிதில்லை என்று முடிவெடுக்கலாம் என்பது அவளுக்குத் தெரிவதில்லை) உழைப்பு போக மீத நேரத்தை வீட்டில் ஒருவருக்கொருவர் உதவியாக, சந்தோஷமாக செலவிடுவர்.

தன் பிள்ளைகள் ஊரிலேயே உயர்ந்த பள்ளிப்படிப்பு, மற்றும் உயர்ந்ததாக கருதப்படும் எதற்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கூட்டாக முடிவு செய்வர். பிள்ளைகளுக்கு பணமீட்டும் வெறியை புகுத்தாமல் அனுபவத்தை முதலீடாக வழி மொழிவர்.அறிவை வளர்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் தாரை வார்த்துக் கொடுக்கமல், தொடக்கம் முதல் வாழ்வின் பொருள் பொருள் மட்டுமன்று, வாழ்தல் என்று கற்றுக்கொடுப்பர். சுருங்கக் கூரின், கணவர்கள் A.T.M களாய் வாழாமல், மேன்மை மிகுந்த மனிதப் பிறப்பாய் வாழ்வர்.

ஆணுக்கு மனைவியாகிய பெண் எதற்கு அதுபோல் பெண்ணுக்கு கணவனாகியவன் எதற்கு என்ற அடிப்படைக் கேள்வி எழும் நிலை உருவாகி வருகிறது. பொருள் ஈட்டவும், உடல் இச்சையை போக்கிக்கொள்ளவும், வாரிசு வளர்க்கவும், இவற்றை செய்வதற்காக வாழ்க்கையைத் தொலைப்பதும்தான் திருமணங்கள் மூலம் கிடைக்கும் பயனாக உள்ளது. காதலிக்கும் பொழுது காணும் சுகம் ஏன் திருமணத்திற்கு பின் தொலைந்து விடுகிறது என்றால், மேற்கூறியது போல் தலைமைப் பொறுப்பை கணவன் என்ற பெயரில் ஆண் தன் தலையில் ஏற்றிக்கொண்டு சமுதாயத்தில் தனக்கொரு அங்கீகாரம் தேவை என்று பொருளாதரத்தின் பின்னும், புகழின் பின்னும் ஓடிக்கொண்டு, அன்பை அடகுவைத்துவிடுவதால்தான்.


மார்க்ஸ் கூறிய தொழிலாளர்களுக்கான கூற்றை பெண்களாகிய நாமும் மனதில் கொள்ள வேண்டும்....

ஆம்..தோழிகளே நாம் முதலாளிகளுக்காகவும் சேர்த்துத்தான் போராடுகிறோம்.

நம் வீட்டில் கிடக்கும் விலையுயர்ந்த டீ வி, சோபா அலங்காரப்பொருட்கள், கழுத்தில் மின்னும் நகைகள் என அனைத்தும் நம் அன்பை தின்று கொழுத்த மிருகங்கள். ஆம் தோழிகளே...... அம்மிருகத்திற்கு தலையைக்கொடுக்கும் கணவன் எனும் ஆணை பார்வையாளர் வரிசையில் இருந்து காணுவதை விட காப்பாற்றுவது கடமை.

Monday, April 19, 2010

கூர்மையற்ற சொற்களும், கூர்மையுற்ற புரிதலின்மையும்.

உலகில் உள்ள ஒவ்வொன்றும் இடைவிடாது மாறிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொன்றிலும் உள்ள முரண்பாடே, எதிர்மறைகளின் போராட்டமே வளர்ச்சியின் உந்து சக்தி

-ஹெகல்



அன்று நடந்த கூட்டத்தில் ம க இ க இயக்கத் தோழர்களும், புரட்சி இயக்க சகோதரிகளும் ஒழுக்கம் பற்றியும், கலாசார சீர்கேடு பற்றியும் பேச எத்தனித்து தனி நபரின் சுதந்திர சிந்தனையும், வாழ்க்கையையும் அநாகரீகமாக பேசி சமுதாயத்திற்கான நல்லது எது என்று கையில் எடுத்துக்கொண்டு பேசினார்கள் புரிதலற்ற காரணத்தால்.



நண்பர்களே ஒழுக்கம், கலாச்சாரம் என்பது மனிதன் தோற்றுவித்த ஒரு கோட்பாடுதானே. கூட்டு நலன் கருதி என்ற போர்வையில் ஒரு கும்பல் அதிகாரச் சிந்தனையுடன் தோற்றுவித்ததே கலாசாரக் கூறுகளும் அதை ஒட்டிய ஒழுக்கக் கூறுகளும். அவற்றை ஏற்றுக்கொள்ளும் உரிமை அனுமதிக்கப்படும் பொழுது ஏன் சந்தேகப்படவும், நிராகரிக்கவும் , விமர்சிக்கவும் மறுக்கப்படுகிறது? இப்படிப்பட்ட சார்புடைய சிந்தனைகளையும், தனிநபர் கொச்சை விமர்சனங்களையும் நானறிந்த மார்க்சியம் வழிமொழியாது என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ( எந்த மேடையிலும் ஒரு விமர்சகரை தேவடியா என்று CPI, CIIM அழைத்ததில்லை.) மனிதம் சார்ந்த பண்புகளையே நான் ஒழுக்கமாக கருதுகிறேன். அதைவிட்டு பார்ப்பனியம் கற்றுகொடுக்கும் "உறுப்பு சார்ந்த ஒழுக்கம்" என்பது பெண்களுக்கெதிரானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்துக்கெதிரானது.



அன்று குரல் கொடுத்த அத்தனை நண்பர்களும் எங்கல்சின் "குடும்பம், அரசு, தனிசொத்து ஆகியவற்றின் தோற்றம்" எனும் புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். கடவுளின் பெயராலும், கலாசாரத்தின் பெயராலும் பார்ப்பனிய பக்தி இயக்கம் செய்த சதிகளை பெரியார் ஐயா அவர்கள் பக்கங்களாக எழுதிதள்ளியும், பெண்கள் இன்னும் கலாசார அடிமைகளாய் இருக்க கடவர்கள் என்று ஆண்களுக்குத் துணையாகவும், சில சுயநல அரசியல் விளம்பரதாரர்களுக்கு துணையாகவும் குரல் கொடுப்பதும், ஒரு பெண்ணை பலபேர் முன்னிலையிலும், ஊடகங்களிலும் கொச்சையாக எழுதுவதும் போதிய வாசிப்பனுபவம் இல்லாததையே காட்டுகிறது. கற்றறிய நினைக்கும் பெண்களை முடக்கி வைப்பதும் அத்தகைய கலாசார கட்டமைப்புகளே என்பதை மனதில் கொள்ளவேண்டும். கலாச்சாரம், ஒழுக்கம், ஆடை நாகரிகம் பற்றி பேசுவோர் ஏன் ஆதிகால வாழ்க்கை முறையை பரிந்துரைக்காமல், இடையில் தோன்றிய அரசியல், மதம் சார்ந்த கலாசாரத்தையே பற்றிகொண்டலைகிறார்கள். (பாவம் அறியாதவர்கள்...!!!)...ஆதியில் கூட்டு குழு வாழ்க்கை-பாலுறவு (பாலிகமி) போன்ற பழக்கம் வைத்திருந்தார்களே? இன்றும் சில பழங்குடி சமூகத்தில் இம்முறை நடைமுறையில் உள்ளதே...அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா. அல்லது அப்பெண்களுக்கு உறுப்பு இல்லையா?



'சுயமரியாதை உள்ள எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ளமாட்டாள். கருப்பையை அறுத்தெறிந்துவிடுவாள் போன்ற சிந்தனைகளைக் ஒரு ஆண் கூற சுதந்திரம் அளித்த இச்சமூகம், தன் உடலுக்கு நேரும் வன்கொடுமைகளை எழுதுவதை ஆபாசம் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. அந்த உறுப்புகள் உடம்பில் இருப்பதை இவர்கள் ஆபாசம் என்று கருதுகிறார்கள் போலும். சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வரை பெண்ணின் அங்கங்களை வருணித்துப் பாடும் ஆண்கவிஞர்களை புலவர்கள் என்று போற்றி பரிசில் தரும் மண்ணிது. பெண்களே நான் ஆண்களை குறை கூறவே மாட்டேன் ஏனென்றால் ஆண் சிந்தனையை கண்மூடித்தனமாக உங்கள் சிந்தனையாக நீங்கள் ஏற்றிவைத்திருக்கிறீர்கள். அதுவே அவர்களின் வெற்றி.





ஆண் நண்பர்கள் லீனாவின் கவிதைகளை தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு கோபம் ஏற்படும் விதத்தில் தூண்டிவிட்டு பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அன்று அக்கழக தோழர்கள் எழுப்பிய சில கேள்விகள்

பெண்ணியம் பேசும் ஆதரவாளர்கள் ஏன் குஜராத் வன்முறைக்கும், தஸ்லீமா நஸ்ருதீனுக்காக போராடவில்லை என்று கேட்டார்கள். கலாச்சாரத்திற்கும் ஆபாசத்திற்கும் எதிராக தடை விதிக்க கோரும் இவர்கள் ஏன் சினிமா அரங்கில் நின்று போராடுவதில்லை. இரட்டை அர்த்த பாடல்களும், தொப்புள் நடனங்களும், பிதுங்கிய மார்பும் காட்டி வியாபாரம் செய்யும் முதலாளிகளுக்கெதிராக கலாசார சீர்கேட்டை பேசலாமே? மேலும் ஆண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள பாலியல் புத்தகங்களுக்கு தடை விதிக்க போராடலாமே என்று எதிர்கேள்விகள் கேட்பது ஒருவரை ஒருவர் மடக்கும் சாமர்த்தியத்தை மட்டுமே காட்டும் .. இவர்களுக்கு தேவை விளக்கமா அல்லது வாக்குமூலமா.

என் இலக்கிய அறிவுக்கெட்டியவரை லீனா எத்தலைவர்களையும், இயக்கச் சிந்தனைகளையும் நிந்தனை செய்ததாக படவில்லை...அவர் கூறுவது உலகறிந்த உண்மை...அதாவது...ஒரு பெண்ணை அடைய ஆண் எவ்வித உத்திகளையும் கைகொள்கிறான் (இது பெண்களுக்கும் பொருந்தும் சுயநலம் மனிதனுக்கு பொதுவானது தானே) அதிலும் அறம் பேசும் மார்க்சியத்தையும், தொழிலாளர்களுக்கு உயிர் மூச்சான கம்யூனிசத்தையும் , மற்றும் புகழ் பெற்ற புரட்சியாளர்களையும் பேசி தன் மேதமையை காட்டுகிறான். இங்கு இவற்றை எதிர்கொள்ளும் ஒரு பெண் இலக்கிய அறிவுள்ளவள், மார்க்சியத்தில் ஈடுபாடுள்ளவள் என்ற காரணத்தால் இவற்றை பேசி மயக்கும் ஒருவரைப் பற்றி எழுதுகிறார். - இதற்கு நம் சகோதரர்கள் "நீ சந்தித்த (அதாவது அப்படி உறவு வைத்துக்கொண்ட என்று பொருள்) அப்பேற்பட்ட நபர்களின் பட்டியலை கொடு" என்று மிகவும் கொச்சையாக பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஒரு கவிஞர் உண்மையைத்தான் எழுதவேண்டும், அதுவும் தான் எதிர்கொண்டிருந்தால்தான் எழுதவேண்டும் என்பதெல்லாம் முதிர்ச்சியற்ற போக்கு. அப்படிஎன்றால் ஒரு ஆண் கற்பகாலம் பற்றியும், பிரசவ வேதனை பற்றியும் எழுதவேக் கூடாது (என் தோழன் வசுமித்ர கூறுவது).

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை வசைச்சொல்லாக பயன்படுத்தும் ஆண்களுக்கு அதை மந்திரச்சொல்லாக உபயோகிக்க வலியுறுத்தும் ஒரு போக்காகவே நான் அதைக் கருதுகிறேன். அல்லது பெண்களின் அங்கங்களின் மேல் ஆண்கள் ஏற்றிவைத்திருக்கும் பாலியல் சார்ந்த அத்தனை சிந்தனைகளுக்கும் எதிராக அச்சொல்லை, அந்த உறுப்பை பொருளற்றதாக மாற்றிவிடும் போராட்டம். அப்படி பொருளற்றதாய் மாற்றி விட்டால் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிவிடலாம் என்ற மூடநம்பிக்கையின் காரணமாகக்கூட கருதலாம்....

நண்பர்களே எல்லோருக்கும் அந்தரங்கம் என்றொன்று இருக்கிறது...பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாலேயே அந்த அந்தரங்கங்கள் எல்லோருக்கும் சொந்தமென்றாகிவிடாது. இதில் கவனிக்கவேண்டியது அந்தரங்கம் என்பது ஒருவருடைய பாலியல் உறவு சார்ந்தே (காமம் சார்ந்தே) இருக்கிறது. ஆகவேதான் அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வமும் மேலோங்குகிறது. அதுவும் கலாசாரத்தைப் போற்ற, என்பதைவிட, ஒருவர் காமத்தை எவ்வாறெல்லாம் கைகொள்கிறார். அதிலிருந்து நமக்கும் ஏதாவது உக்தி கிடைக்குமா என்ற சிந்தனை, அல்லது, நம்மை போன்று நால்வர் காம இச்சைகள் கொண்டுள்ளனர் என்று அச்செயலை அறிவதன் மூலம் நமக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிக்க உதவுகிறது. உறுப்பு சார்ந்த ஒழுக்க மீறலால் ஏற்படும் சீர்கேட்டைவிட அறமற்ற, மனிதாபிமானமற்ற, பணத்தாசையினால் விளையும் சீர்கேடுகள் தான் களையப்படவேண்டியவை...ஆனால் அவைகளுக்கெதிராக நாம் ஏதும் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் அங்கே நாம் எதிர்க்கவேண்டியது முதலாளிகள், அரசியல்வாதிகள். கலாசாரம் என்ற பெயரில் நாம் எதிர்ப்பது ஒரு தனிமனிதனை. அப்பாவிக் குடிமகனை(அல்லது மகளை) அதுவும் உயிர்பயம்காட்டி.



ஒருவரை எதிர்கொள்ள/ விமர்சிக்க/ வீழ்த்த ஒருபோதும் ஒழுக்கமான/ அறம் சார்ந்த முறைகளை யாரும் கையாள்வதில்லை. ஒன்று அவமானம் எனும் ஆயுதம் ஏந்துகிறார்கள் (மானம் என்பது ஒரு கற்பிதமே என்று விவாதிக்கலாம்) அல்லது பௌதிகமான ஆயுதம் ஏந்தி உயிர் பயம் காட்டுகிறார்கள். இது அடக்குமுறை. உயிருக்கு பயந்து ஒடுவோர் ஒடுங்குவது, அல்லது ஒடுக்கப்படுவது ஜனநாயகமன்று. அப்படி ஒருவரை முடக்குவதால் கிடைக்கும் வெற்றி அவர்கள் ஏந்தும் சொற்களுக்கும், ஆயுதங்களுக்கும் கிடைப்பதே அன்றி அறிவு சார்ந்த வெற்றியல்ல. போர்க்களத்தில் ஆயுதமின்றி நிற்கும் எதிராளியை எதிர்ப்பது கோழைத்தனமென்றால், இது போன்று உயிர் பயம் காட்டி வன்முறையை ஏவுவதும் கோழைத்தனமான செயலே..



எல்லாவற்றிலும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பூசி பார்பவர்கள் அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தும் அல்லது பகிர்ந்துகொள்கிற ஊடகமாக இலக்கியத்தை பார்க்கத்தவறி வருகிறார்களோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. இங்கே எழுத்தோ, கருத்தோ பிரச்சனை இல்லை. எழுதியவர்தான் பிரச்சனை. அதிலும் அவருடைய இனம் (பாலியல் பிரிவினை) கூடுதல் பிரச்சனை. இங்கே சுதந்திரம் என்பதற்கு கூட பாலியல் சாயம் பூசி அது ஆணின் சுதந்திரமாகவே இருக்கவேண்டும் என்று செயல்படுகிறார்கள். இவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவோ. அல்லது கலாச்சாரம் என்ற பெயரிலே ஆண்கள் பெண்கள் மேல் ஏற்றி வைத்திருக்கும் அடிமைப்பாட்டை அறியாத பெண்களும் சேர்ந்துக்கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

பல்லாயிரம் வருடங்களாக பெண்களை கவர்ச்சிப் பொருளாகவும், புணர்ச்சித் துணையாகவும், வீட்டு வேலைக்காரியாகவும் இன்ன பிற அடிமையாகவும் நடத்துவதற்கு ஏதுவாக இலக்கியங்கள், புராணக்கதைகள், ஒழுக்ககூறுகள், பெண்கடவுள் தன்மை என்று வரைந்து, பல பல வழிகளில் அவள் பிறப்பின் உண்மை அறியா வண்ணம் ஓர் மாயைக்குள் புதைக்கப்பட்டிருப்பதை அவளே அறியா வண்ணம் மிகவும் சாமர்த்தியமாக புனைந்திருக்கிறார்கள். இந்த மாயையின் பரிதாப கட்டம் என்னவென்றால், இப்புனைவுகளை கண்டுகொண்டுவிட்டதாக ஒருத்தி அறிவிக்கும்போது பெண்களே அதை எதிர்க்கவும், பேசும் பெண்ணின் மீது கல் எறிந்து கொல்லவும் கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் அவள் மூளையை, அவளே அறியாமல் சலவை செய்து வைத்திருப்பதுதான்.



வலைப்பதிவில் எழுத வந்த இந்த குறுகிய காலத்திலேயே என் வலைப்பதிவில் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. என் எழுத்துக்கள் வசை மிகுந்ததாகவும், பாலியல் சார்ந்தே இருப்பதாகவும், இப்படி நான் ஆண்களுக்கெதிராய் எழுதுவது, என் கணவருக்குத் தெரியுமா, பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று ஆண் கூட்டம் கூச்சலிட்டது. ஒருவேளை பெண்கள் ஏமாற்றுபவராய் இருந்தாலும் சதவிகிதம் சொற்பமாகவே இருக்கும். மேலும் அவள் உறுப்புகளை சிதைக்கும் செயல்களையும். குழு கற்பழிப்புகளையும் செய்வதில்லை. இப்படி பொறுக்க முடியாத, ஆனால், ஆண்டாண்டு காலமாய் பெண்களை வெறும் மாமிசமாய் பார்க்கும் ஆண்களைப் பற்றியும் அச்செயல்களைப் பற்றியும் எழுதும் பொழுது கலைநயமிக்க உவமைகளையா தேர்ந்தெடுத்து எழுத முடியும். எங்கள் மார்பை போகிற போக்கில் எவரோ பிசைந்து விட்டு போவார், நாங்கள் அதை மார்பு என்றும், முலைகள் என்றும் உண்மை பெயர் சொல்லி எழுதக் கூடாதென்பது நகைச்சுவையாக உள்ளது.

சுருங்கச் சொல்லின் மார்க்ஸ் கூறியது போல் நாம இவர்களுக்காகவும் சேர்ந்து தான் போராடுகிறோம் (நாங்கள் எழுதுகிறோம்). நாளை எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர்களின் தனி மனித சுதந்திரம் தடை செய்யப்படும் போதும் நாங்கள் இதுபோல் குரல் கொடுப்போம். நாங்கள் நம்பும் மார்க்சியம் எங்களுக்கு வழிகாட்டும்.







Friday, March 12, 2010

என் மித்ர......

வாழ்நாள்தோழனாய் வசுமித்ரவை

நானும்,

என்னை

வாழ்நாள்தோழியாய் அவனும்

இணைத்துக்கொண்டோம்.

எல்லையற்ற பெருவாழ்வு...

Sunday, February 21, 2010

Few Thoughts

உங்கள் மனம் குளிர, உங்களை மகிழ்விக்க, உங்களை பொருட்படுத்த...நான் என் முகத்தை மாற்ற இயலாது...நல்லவள் எனும் பெயர், கற்பிதங்களின் படி நடக்கும் என் பொய்மைக்கு கிடைக்கலாம். நிஜத்தில் நான் கர்வி எனும் பெயர் எடுக்க விரும்புகிறேன்.

பெரும்பான்மையைப் போன்ற பிரதியாய் ஒருவர் இல்லையேல்..அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக விதிக்கிறது சமூக கட்டமைப்பு....... "


எழுதப்பட்டவை வரலாராகிறது...மற்றையது நிஜங்களாகிறது....

அப்பாவின் கனவு..மகளின் லட்சியம்...
கணவனின் கனவு...மனைவிக்கு அந்தஸ்த்து...
பெண்ணின் கனவு...இடுகாட்டின் விளைச்சல்....

மற்றவர்கள் கற்பித்ததால் போதும் என்று நினனத்து அடங்கியபின்னரும்..உள்ளே ஏதோ ஒரு அரூபமான அழுத்தம் தோன்றுகிறதே, எனக்கு அந்த உணர்வு போதாமை....போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கூற்றை உலகின் மிக ஆபாசமான வார்த்தை என்பேன் நான்...

நீங்கள் கிசுகிசுக்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் அன்பைப் பரிமார்க்கொண்டிருக்கிறோம்... எங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம் உங்களுக்கு படுக்கை அறை தெரிகிறது... எங்கள் உடல்களை பங்கு போடுவதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை... உங்கள் கற்பனைப் புனர்ச்சிகளுக்கு நாங்கள் வெளியேற்றம் செய்ய இயலாது...


என்னைப் பற்றி முழுக் கதையும் தெரிந்த பின், என்னைக் கட்டாயமாக நீங்கள் வெறுப்பீர்கள். அப்படி வெறுக்கவில்லை என்றால் நீங்கள் முட்டாள். அதையும் மீறி நீங்கள் புத்திசாலி என்றால்..நீங்கள் இந்த சமுதாயத்திடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..

Sunday, February 14, 2010

ஆண்களின் பெருந்தன்மையும், வீசும் பச்சை மாமிச வாடையும்.



’ எங்களுக்கு எஜமானர்களாய் இருப்பது உங்கள் நலனுக்கு ஏற்றதாய் இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு அடிமைகளாய் இருப்பது எங்களுக்கு எப்படி நல்லதாய் இருக்கமுடியும்?

தூசிடைடிஸ்


ஆணின் கரங்களால் பெண்களின் குரல்வளையை இறுகப் பிடித்திருப்பதே வரலாறு.

அரசியல், இலக்கியம் முதற்கொண்டு இன்னபிற துறைகள் அனைத்திலும் ஆண் பெண்ணை நோக்கிக் கசியவிடும் ஆண்களின் பெருந்தன்மையில் வீசும் பச்சை மாமிச வாடை குடலைப் புரட்டுகிறது.

தனக்குகந்த கைப்பாவைகளாய், ரசனை வக்கிரத்துக்கு இரையாய் இருக்க பெண்களின் அழகை வர்ணித்து பாடும் ஆண்களின் பேரன்பு வெள்ளம் சாக்கடை நீராய் தேங்கி நிற்கிறது. சுயம் இழந்து, கவிழ்ந்து போக ஆபரணங்களை சூட்டி, அலங்காரம் செய்து வலம் வரும் தேவ கன்னிகளாய் ஆண்கள் தங்கள் கனாக்களில் பல ஊடகங்கள் கொண்டு உலவ விட்டு குளிர் காயும் அவர்களின் கயமை திக்கெட்டிலும் பரவி நிற்கிறது.என் அருமைத் தோழிகளே .... நான் மன்றாடி கேட்டுக்கொள்வதெல்லாம் அழகியல் நாற்றத்தில் நம்மை தோய்த்தெடுக்கும் ஆணின் கருத்தமைவுகள் எல்லாவற்றையும் சந்தேகப்படுங்கள் என்பதுதான். உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள், நடை, உடை பாவனைகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குங்கள். ரம்பை, ஊர்வசி, சீதை [இதில் கண்ணகி கூட விதிவிலக்கல்ல அவளுக்கு ஆண் அமைத்துக் கொடுத்தது கற்பின் அழகியல்] முதல் இன்றைய நடிகைகள் வரை எல்லாப் பெண்களும், பெண் கதாப்பாத்திரங்களும் ஆண்களால் அல்லது ஆண் கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன பெண்களால்

தோற்றுவிக்கப்பட்டவை.பெண்ணை, பெண்ணின் அழகியலை வர்ணிக்கும் ஆண் சொற்களும்,ஆண் பாடல்களும் ,ஆண் தனக்கான பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்பும் ,நினைக்கும் கட்டளையிடும் செயலின் பிரதிபலிப்பு. தனக்கான பெண், தன் ஆளுகைக்கு உட்பட்ட பெண் இந்த அதிகாரத்தை ஒற்றையாய் வைத்து அது வரலாறு தொடங்கி , இன்னபிற அனைத்தும் ஆண்தன்மை கொண்டனவாகவே இருக்கிறது. இதே கூற்றையே இலக்கியத்திலும் ஏற்றி, புனித சேறு பூசி, பெண்கள் முகத்தில் காலம் காலமாக சந்தனமென ஏமாற்றி தடவி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி கிட்டாமல் செய்து அவளை அடிமையாய் வைத்திருக்க கடவுள்,கற்பு, பண்பாடு, ஒழுக்கம், பத்தினித் தன்மை [வேலைக்குப் போகும் பெண்கள் கற்பிழந்தவர்கள் என சுப்பிரமணி [ சங்கராச்சாரியர் ] அறிவிப்பு செய்ததும் அதை கேட்டுக்கொண்டு பெண்கள் நின்றதையும் நினைவில் கொள்க.] எனும் கற்பனை மூலம் பல புனைவுகளை மேற்கொண்ட ஆண் இனம், பெண்களும் கல்வி கற்க ஆரம்பித்தவுடன் அவளை வீழ்த்த அழகியல் போதையை சந்தையில் பரப்பியது.ஆண்களின் உள்ளாடை முதல், கட்டிட கம்பிகள் போன்ற பொருள் வரை [கழிப்பறை பீங்கான் உட்பட...ஆண்களுக்கு அது வராது போல] எதையும் விற்க பெண்களை 'மாடல்களாய்' உபயோகித்து மக்களை விலை பேசும் 'திறந்த விபச்சாரத்தை' செய்து வருகிறது முதலாளிகள் உலகம். ஊடகங்களின் 'மாதிரிப்' பெண்கள் அனைவரும் அழகையும், உடலையும்

முன்னிருத்துபவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். ஆணுக்கான வாசனை திரவம் கூட ஒரு பெண்ணை கவர்வதற்கான சாதனமாய் விளம்பரப்படுத்தப்படுகிறது. அவ்வாசனையில் தன் வசம் இழுக்கும் பெண்கள் அவன் புட்டத்தை கடிக்ககூட தயாராய் இருப்பதாக [ஆக்ஸ் சென்ட் ]ஆணின் பெண் என்ற கற்பனையை முன் வைத்து பெண் இயக்கப்படுகிறாள். பெண்ணுக்கு பிடித்தது, உகந்தது என இவர்கள் முன்வைப்பது அலங்காரப்பொருட்கள் மட்டுமே, நகைகள், புடவைகள் ஆடம்பரங்கள் மட்டுமே.ஆண் செய்யும் ஒவ்வொரு காரியமும், வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெண்ணை கவரவே எனவும் அவளை வீழ்த்துவதே வாழ்நாள் சாதனையாக ஆண் கருதவேண்டும் என்றும் ஆண் இனத்தையும் சேர்த்து இழிவு படுத்துகிறது விளம்பரங்கள். மற்றும், பல்வேறு ஊடகங்கள். பெண்ணுக்கோ தோலின் நிறத்தை மாற்றி அமைப்பதும், அலங்காரம் கொண்டு போட்டி போடுவதுமே வாழ்வியல் ஆதாரமாய் கற்பிக்கிறது மனசாட்சியற்ற முதலாளி வர்க்கம்.இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம் பெண்கள் தங்கள் உடலின் மேன்மை அறியாமல் அதை ஒரு பண்டமாய் நினைத்து சந்தையில் விற்பது. எல்லாவற்றிற்கும் 'தேவை' (demand) ஏற்படுத்தி சந்தையில் தள்ளிவிடும் முதலாளிகள், பெண் உடலுக்கான 'தேவையையும்' ஏற்படுத்தி தங்கள் வீட்டுப் பெண்களை போர்த்தி பூசை செய்து [இதுவும் ஒரு பெண் விரும்பத்தகாததே. இதை இன்னும் கொஞசம் ஆழமாக நோக்கினால் முதலாளி வீட்டுப் பெண்களும் திறந்த முதுகுடன் வலம் வருவதையும் தங்கள் உடலை பார்வைக்கு வைப்பதையும் காணலாம். இது ஒப்பு நோக்கில் விரிவாக ஆராய வேண்டிய விசயமே ]மற்ற பெண்களை உயிரற்ற பொம்மைகளாய் பயன்படுத்தி அவளுக்கு வேசி பட்டம் வாங்கித்தரும் சேவையை செய்து வருகிறார்கள்.

இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் முதலாளியம் எவ்வாறு தன் உடலை அழுக வைத்துக் கொண்டிருக்கிறது என்பது புரியும். மார்க்ஸ் கூறியதைப்போல முதாளித்துவம் அனைத்து உறவுகளையும் பணப்பட்டுவாடாகவே பார்க்கிறது. அது குடும்பத்தின் உணர்ச்சிகரமான முகத்திரையை கிழித்துவிட்டது. .

ஆண்டாண்டு காலமாய் ஆணினத்தின் பாலியல் வேட்கைகளை பெண்ணியல்புகலாய் சொல்லிவந்து, இன்று பெண்கள் தங்கள் அழகை, அங்கங்களை முன்வைத்தால்தான் தங்கள் நிலைப்பாட்டை உறுதிசெய்துகொள்ள முடியும் என நினைக்குமாறு நிச்சயித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது ஆணினம்.

உடலை புனிதப்படுத்தி,ஒழுக்க நெறிகளுக்கு தசைகளை இரையாக்கி,பனத்திற்கு திறந்துபோட வைத்து ஆண்களை விலை பேச வைக்கும் நோக்கோடு பெண்ணுடல் முன்வைக்கப்படுகிறது. இதை அறியா பெண்கள் உடலை பிரதானப்படுத்துவதை முற்போக்கான செயலாகவும் சுதந்திரமான ஒன்றாகவும் கருதுகிறார்கள், பத்தினித்தனம் எப்படி ஆணுக்கு பெருமை சேர்க்கிறதோ அதேயளவில் திறந்து போடுதலும் அவன் விருப்பத்திற்குரியதே.

என் நிர்வாணம் எனக்கு மதிப்பிற்குரியதாய் உள்ளது. விரும்பும்போது, விரும்பும் இடத்தில் நான் மட்டுமே கட்டளை இடக்கூடிய விதிகளுக்குட்பட்டு என் உடலை வெளிப்படுத்துவேன். என் சௌகரியத்திற்காக உடைகளைக் கூட்டவும் குறைக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு. என் உடலை ஆளும் சர்வாதிகாரியாக நான் மட்டுமே இருப்பேன் என பெண்கள் அறிவிக்கவேண்டும். உடலை மாமிசத்துண்டாக மட்டுமே பாவிக்கும் ஆணின் பாலியல் வேட்க்கைக்காக அவிழ்த்துப்போட நம் உடலை முன் வைப்பதில்லை என்ற எண்ணம் பெண்களுக்கு வரவேண்டும். உடலை பொக்கிஷமாக கருதவேண்டும்.

பெண்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணியும் சுதந்திரத்தை அவர்களே எடுக்கவேண்டும். தன் தசைகளை விலைக்கு முன்னிருத்தாமல் சுதந்திரத்திற்காக முன்னிருத்தலாம். முடிந்தால் ஒரு உதாரணத்துக்காக தங்கள் அழகை அப்படியே விட்டுவிடலாம், புருவங்களை மழிக்காமல், பூச்சுக்கள் இல்லாமல். எவ்வித அலங்காரமும் இல்லாது வெளியிடங்களுக்கு சென்று வாருங்கள், உங்கள் பின் வரும் ஆண்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அவன் எதிர்பார்ப்புக்கும் வர்ணனைக்கும் உகந்த பொருளாக நீங்கள் இல்லையென்றால் வர்ணனைப் பாடல்களாவது குறையும்.

ஆடை அலங்காரத்தின் உபயோகம் இரண்டுவகைகளில் ஒரு பெண்ணுக்கு உதவுகிறது. முதலாவது பாலின வேட்கைக்கு உகந்த பொருளாக தோற்றம் தருவது, இரண்டு கணவனின் சமூக படிநிலையைப் பிறருக்கு புரியவைப்பது. இவ்விரு தோற்றமும் வழக்கம் போல பெண்ணைப் பிறர் சார்ந்த உயிராகவே நிறுத்த உதவுகின்றன. பெண் ஆடை அணிவதன் நோக்கம் பிறருக்கு தன்னைக் காட்டிக்கொள்வதின் மூலம் தன் இருப்பு நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள என விளக்குகிறார் சிமோன்.

பெண்ணுக்கு வாழ்நாள் தேவை ஆணின் அருகாமையே, ஆணின்றி பெண்ணால் தன்னிச்சையாக இயங்கமுடியாது என்பதன் ஒரு தொடர்ச்சியாகவே நான் திருமண உறவையும் காண்கிறேன். அதை பெண் நம்பி, பின்பற்றி ஒழுகவே கலாச்சாரம் பண்பாடு என ஆண்கள் வகுத்த வாய்க்கால் ஓடுகிறது. திருமணம் ஒன்றே பெண்ணுக்கு பாதுகாப்பைத் தர வல்லது என நிறுவப்பட்டு அவள் குடும்ப உறவில் ஈடுபடவும், ஆணுக்காக வாரிசைச் சுமக்கவும், அவன் தரும் வசதி வாய்ப்புக்காக நிரந்தர விபச்சாரியாக வயது கழிந்ததும் தாய்மைப் படிமத்தைத் தூக்குச் சுமக்கவும் ஆளாகிறாள். ஆனால் பாலியல் வன்முறைகள் அனைத்தையும் ஆணே செய்கிறான். ஆணுக்கு பெண்ணின் துணை ஒவ்வொருகாலத்தும் தேவைப் படுகிறது, தேவை என்று சொல்வதைவிட இட்ட வேலையைச் செய்ய ஒரு ஏவலாள் என சொல்வது சரியானது. அவளை அனுபவித்துக்கொண்டே இருக்க பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, பெண்களுக்கு சுதந்திரமற்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி தன் விருப்பங்களைக் கொண்டாடி வருகிறது ஆணினம்.

ஆண்களின் மாபெரும் வெற்றி அவன் ஆதிக்க கருத்துகளை பெண்களே முன் வந்து தானே விரும்பி ஏற்றுக்கொள்ளவைத்ததுதான். என் கடன் பணி செய்து கிடப்பதே என பெண்களைச் சொல்லவைத்ததும், அவள் மகிழ்ச்சி அதுதான் என அவளையே பின் பற்ற வைத்ததும்தான்.

[ கலாச்சார புரச்சிக் காலகட்டத்தில் சீனாவில் ஒரு விடுகதை பரவியிருந்தது.

ஒருதடவை தலைவர் மாஓ பிரதமர் சூவிடமும் சேனாதிபதி சூ தேயிடமும், ஒரு பூனையைக் கொண்டு எப்படி மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வைக்கமுடியும் என்று கேட்டார். மிளகாய்க்கு இனிப்புத் தடவி ஊட்டினால் பூனை தின்று விடும் என்றார் சூ. பூனையின் வாயைக் குறட்டினால் பிளந்து பிடித்துக்கொண்டு, அதன் தொண்டைக்குள் மிளகாயைத் திணித்துவிட்டால் பூனை விழுங்கிவிடும் என்றார் தே. பூனை மனம் விரும்பி மிளகாயைத் தின்ன வேண்டும் அல்லவா? ஆகவே இருவரின் பதில்களும் மாஓவுக்கு நிறைவளிக்கவில்லை. உங்கள் பதில் என்ன என்று அவர்கள் மாஓவிடம் கேட்டார்கள். ஒரு மிளகாயை முறித்துப் பூனையின் பின்புறத்தில் உராஞ்சி விடவேண்டும். எரிவு தாங்காது பூனை உடம்பை வளைத்து அதன் பின் புறத்தை நக்குநக்கென்று நக்கும், உறைப்பை நக்கிப் பழகிவிடும். அப்புறம் அது மிளகாயை மனம் விரும்பித் தின்னத்தொடங்கிவிடும் என்றார் மாஒ!.]

பெண்ணின் தாழ்வு நிலையை இன்னொரு பெண் சுட்டிக்காட்டினால் அப்பெண்னை முதலில் தாக்குவது ஆணல்ல இன்னொரு பெண்தான். தனது தேடல்களை பயன்படுத்தி உண்மைகளைக் கண்டறியும் பெண் ஆணின் சதிகளைக் கட்டவிழ்க்கும் போது அவள் கோருவதாக ஆண்கள் சொல்வது, பாலியல் சுதந்திரம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள விழியும் விருப்பம். ஆணின் கலாச்சார பயம் இதை மட்டுமே கூறும். அவன் மனைவியும் , மகளும் ஒரு பெண்கள்தான் அவர்களும் அதைப் பேசும் வாய்ப்பு இருக்கிறதல்லவா. இருக்கட்டும்.

பெண்கள் ஆம் என்று சொல்வதற்குள்ள சுதந்திரம், இல்லை என்று சொல்வதிற்கில்லை.

Tuesday, January 19, 2010

சமுக அறமும் , தற்கொலைகளும்.


சில நாட்களாக பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணத்தை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. கள்ளக்காதல் செய்தியும், விபச்சார அழகி கைது என்றும், கற்பழிப்பு விபரங்களும் நாள் தவறாமல் வந்துவிடுகிறது. அவர்கள் உபயோகிக்கும் 'உல்லாசம்', 'பகீர்' போன்ற வார்த்தைகளும், கைது செய்யப்பட்டதாக பிரசுரிக்கப்படும் வாக்குமூல நடையும் மிகவும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. இச்செய்திகளை படிப்பவர்கள் மனதில் வலியை ஏற்படுத்துவதற்கு பதில, அச்செயல்களை அவர்கள் எப்படி புரிந்திருப்பார்கள் (.ம் கற்பழிப்பென்று வைத்துகொள்ளுங்கள்) என்று மனதில் காட்சி ஓடச்செய்து மேலும் காம வெறியைப் புகுத்துவதாகவே உள்ளது.

ஒவ்வொரு சொற்களும் விவாதத்துக்குரியதாய் உள்ளது. முதலில் 'கள்ளக்காதல்' - காதல் என்பது எவருடன் வந்தாலும் அது காதலாகத்தானே இருக்கவேண்டும், அது கள்ளகாதலாய் குறியிடப்படுவதற்கு எது காரணம்? 'ஒழுக்க' விதிகள் எவ்வாறு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று விவாதிக்க விரும்புகிறேன். சுதந்திரநாடு என்று நாம் பறைசாற்றிக்கொள்ளும் நிலையில், தனி மனித சுதந்திரம் என்பது ஒழுக்கத்தின் பெயரால் நசுக்கப்படுவதை நான் உணர்கிறேன். திருமணம் என்பது இருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தம், (திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது - குடும்பம் எனும் அமைப்பு வன்முறைக் களமாக மாறும் சித்திரம் ). சில பல காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் உரிமை மானம், அவமானம் எனும் அர்த்தமற்ற கூற்றுகளால் முடக்கப்படுகிறது.

ஆகவே விருப்பமின்றி சகித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கு. இங்கு எப்பொழுதும் ஒரு மனிதனை வீழ்த்த அவமானம் எனும் ஆயுதமே கையில் எடுக்கப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலும் அந்தரங்கம் என்பது காமம் சார்ந்தே இருக்கிறது, காமம் என்பதை அடக்கு முறைகளுக்கு உட்படுத்தி, புனிதப்படுத்தி பின்பு அதையே ஒரு இழி செயலாகவும் விவரிக்கிறது சமூகம். எத்தனை ஒழுக்க முறைகள் விதிக்கப்பட்டாலும், பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க எதுவும் உபயோகப்படவில்லை.

வசதி திருமணம் பற்றிய எங்கல்சின் கருத்து "வசதித் திருமணம் பெரும்பாலும் படு மோசமான விபசாரமாகி விடுகிறது. இது சில சமயங்களில் கணவன், மனைவி, இருவர் தரப்பிலும் நடக்கும்; ஆனால் மனைவியின் தரப்பில் மிகவும் பொதுவாக நடைபெறுகிறது. அவளுக்கும் சாதாரண விலைமகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவள், ஒரு கூலித் தொழிலாளி தனது உழைப்பை விற்பதைப் போலன்றி நிரந்தர அடிமைத்தனத்துக்குத் தன்னுடைய உடலை விற்பனை செய்கிறாள் என்பதே".

திருமணத்தை அதன் வாழ்வுமுறையை சகித்துக்கொள்ளும் நிலையில் , பெண்ணோ, ஆணோ அவரவர் மனதில் இருக்கும் கனவு நபரை காணும் பொழுது மனம் அவரை நாடுவது இயல்பான ஒன்று. நேசிப்பவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு அவர்களின் விருப்பத்துக்கேற்ப அமையும் போது ஆணாய் இருந்தால் அலைபவன், பெண்ணாய் இருந்தால் விபச்சாரி. அவர்களின் உறவுக்கு கள்ளக்காதல் என பெயரிட்டு அவர்களை கேலி செய்கிறது. கேலிக்கும், அவச் சொற்களுக்கும் பயந்து அவர்கள் தங்கள் நேசத்தை மறைக்கவேண்டிய நிலை உருவாகிறது. சமுகம் ஒழுக்கம் என திணிக்கும் வன்முறையால் அவர்கள் தற்கொலை செய்யத் தூண்டி, அதில் வெற்றி பெற்று தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறது. பிடிக்காத துணையை நீங்கிவிட்டு வரவும் உரிமை இல்லை, தனக்கான துணையை நேசிக்கவும் உரிமை இல்லை. விளைவு சாவு.

சில நேரங்களில் காதலர்கள் பிரிக்கப்பட்டு , வெவ்வேறு நபர்களை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆழ்ந்த காதலாக (இதை சமுகம் கொடுக்கும் அழுத்தத்தோடு நான் கூறவில்லை. உண்மை காதல் என்ற கூற்றை நான் விரும்பவில்லை...ஏனென்றால் உண்மை என்பதும் கற்பிதமே,அதற்கப்பால் எவரின் உண்மை ...என நீண்டு கொண்டே போகும் .) இருந்த பட்சத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க இயலாமல் தங்கள் காதலை தொடர நினைக்கிறார்கள். குடும்பம், குழந்தை போன்ற உறவுகளை மதித்து அவர்கள் கடமையாற்றுகிறார்கள். அதே நேரம் அவர்கள் நேசத்தையும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் தொடர்கிறார்கள்.

எந்தவொரு சட்டத்திலும் காதலோ,காமமோ குற்றமாக அறிவிக்கப்படவில்லை, இதை வகையில் பிரித்துப்பார்த்து விமர்சிப்பது முறையற்றது. குறிப்பாக 'உல்லாசம்' எனும் வார்த்தையை இவர்கள் உபயோகிக்கும் முறை குமட்டுகிறது. காதல் கொண்ட இருவர் தங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்வதும் , உடல் உறவு வைத்துக்கொள்வதையும் 'கணவனுக்கு அல்லது மனைவிக்குத் தெரியாமல் உல்லாசமாக இருந்துவந்தர்கள்' என்று விவரிக்கிறார்கள்.

அறிவித்துவிட்டு செய்யவும் அக்காதலர்கள் தயார் என்றால் அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்? அல்லது தன்னுடன் வாழ விருப்பம் இல்லாத துணையை பெருந்தண்மையுடன் அவர்களுக்குப் பிடித்தவருடன் அனுப்பிவைப்பர்களா?

அடம் பிடிக்கும் கணவனுக்கும், மனிவிக்கும் என்ன தேவை அவர்கள் துணையிடம் இருந்து, மனமொத்த அன்பா அல்லது சமூக குழுக்கள் கற்பித்த மான, அவமான கூற்றுக்கு அடிபணியும் ஓர் அடிமையா? ஓர் ஆணும், பெண்ணும் விருப்பமுள்ள வரை மட்டுமே சேர்ந்து வாழ வேண்டும், இல்லாத பட்சத்தில் விருப்பமானவர்களுடன் சேர்த்துவைக்கவேண்டும் எனும் பெரியாரின் கூற்றை நான் முன்மொழிகிறேன். (ஒருவேளை கணவனோ மனைவியோ புரிதலின் பேரில் அதற்குத் தயார் என்றால், அவன் கூட்டிக்கொடுக்கிறான் என்றும் வசைமாறி பொழியும் இந்த சமுதாயம்).

குடும்பம் என்ற நிறுவனம் (institution) தோன்ற காரணமும், அரசியலும் அறிவதே இதற்கான தீர்வாய் அமையும். படுக்கை அறைக்குள் எட்டிப்பார்க்கும் அல்லது பார்த்தது போல் விவரிக்கும் போக்கை பத்திரிக்கைகள் கைவிடவேண்டும். இது ஒரு தனிமனித சுதந்திரம் சார்ந்த விஷயம், அங்கே ஒருவேளை கொலைகள் நிகழ்ந்து விட்டாலும் கூட கொலைக்கான விசாரணைகளை சட்டம் மேற்கொள்ளட்டும் அதை நீலப்படம் ஓட்டுவது போல் வியாபார நோக்கோடு பிரசுரிப்பது தவிர்க்கப்படவேண்டும்.



"இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் உடன்பாட்டுப் பொருள் ஆவதைப் போல, திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னடத்தை ஆகின்றன"
பூரியே.



சிறு குறிப்பு.

1. கற்பழிப்பு என்பது ஆணாதிக்கச்சொல். அதை வன்புணர்ச்சி என்றே அழைக்கவேண்டும்.
2. சிறிமி கற்பழிப்பு. இச்சொல்லில் இருக்கும் வன்முறையின் உச்சத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா...

முடிவாக...
கற்பு, ஒழுக்கம் ,தூய்மை, புனிதம், தாய்மை, பெண்மை, விபச்சாரி, இவை போன்ற சமுகம் சார் வார்த்தைகளுக்கு அஞ்சி பெண்கள், இவ்வுறவோடு தொடர்புடைய ஆண்கள், குழந்தைகள் தங்களுக்கு நேரும் வன்முறையை சொல்லப்பயந்து நாளும் இதே சமூகத்தின் முன் செத்து செத்துப் பிழைக்கிறார்களோ, அல்லது தற்கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு இக்கட்டுரை....இனி இது தொடர்பாய் விரிவாகவும் எழுதுவேன்.